புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
வரலாற்று தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோவில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் அரசுக்கு வந்தன.
அவற்றை ஏற்று அந்த நகராட்சிகளையும், அவற்றின் அருகில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டில் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை தொடர்ந்து, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர்.