தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் திண்டாடி கொண்டு இருக்கும்போது, தமிழக முதல்வர் வீட்டிற்கு மட்டும் தினமும் 3 லோடு தண்ணீர் அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. முக்கியமாக சென்னையில் மக்கள் தண்ணீருக்காக இரவு பகல் என்று பாராமல், கைகளில் காலி குடங்களையும், கேன்களையும் வைத்து காத்திருக்கின்றனர்.
தண்ணீர் பஞ்சம் காரணமாக தமிழக கிராமங்களில் சுனைகளிலும், ஊற்றுகளிலும், மக்கள் வெயிலில் கால் கடுக்க சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு மட்டும் தினமும் 3 லோடு தண்ணீர் அனுப்பப்படுவதாக செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 9000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் ரோட்டிலுள்ள குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மந்திரி வீட்டிலிருந்து தினமும் இது போல் கேட்பார்கள் என்றும்,ஆதலால் நாங்களும் அனுப்பி கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும்போது, முதல்வரின் வீட்டுக்கு மட்டும் தினமும் 3 லோடு தண்ணீர் அனுப்பப்படும் செய்தி மக்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் பேட்டியில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை எனவும், மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றனர் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.