தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு 3 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் தென் – மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு 3 நாட்கள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.