நேற்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை கடற்கரையில் காணாமல் போன குழந்தைகளை போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நேற்று பொங்கல் விழாவின் இறுதி நாளான காணும் பொங்கலை கொண்டாட ஏராளமான மக்கள் பொது இடங்களுக்கு சென்றனர். சென்னையில் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரைகளுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.
அதிகமான மக்கள் கடற்கரை வருவார்கள் என்பதால் 15 ஆயிரம் போலீஸார் சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னை கடற்கரை பகுதியில் காவல் கோபுரங்கள், சிசிடிவி கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காணும் பொங்கலில் மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் காணாமல் போன 27 குழந்தைகள் போலீஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெற்றோர் பெயர், அலைபேசி எண் கொண்ட டேக் அங்கு வரும் அனைத்து குழந்தைகளின் கைகளிலும் கட்டப்பட்ட நிலையில் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பது எளிதாக மாறியுள்ளது. போலீஸாரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மக்கள் பாராட்டியுள்ளனர்.