கடந்த சில வாரங்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமானதை அடுத்து தற்போது சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கிலும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் சுகாதாரத் துறை அளித்துள்ள தகவலின்படி சென்னையில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேர்களும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஐந்து பேர்களும் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரும் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும், இன்று மட்டும் கொரோனாவுக்கு சென்னையில் 22 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டும், சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டும், 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது