22 தமிழர் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு மரபுரிமையாளர்களுக்கு ரூ. 84 லட்சம் பரிவு தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணா நிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறந்த தமிழறிஞர்களின் நூல்கள் அனைவரையும் சென்றடைதல் வேண்டும் எனும் சீரிய நோக்கில் அந்நூல்களை நாட்டுடைமையாக்கி, அவற்றைப் படைத்த தமிழறிஞர்களின் மரபுரிமையாளர்களுக்குப் பரிவுத் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
2006-இல் இந்த அரசு பொறுப்பேற்றபின் பரிதி மாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்களுக்கு 4 கோடியே 86 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2009-2010ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வண்ணம் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், இராய சொக்கலிங்கனார், முனைவர் ச.அகத்திய லிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர்க்கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு.இராகவையங்கார் ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும்,
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பம்மல் சம்பந்தனார், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு.கோதை நாயகி, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தன், திருக்குறள்மணி அ.க.நவநீத கிருட்டிணன் ஆகிய 12 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ.3 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் படைப்புகள் அரசுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்ட 28 தமிழ் அறிஞர்களில் எஞ்சிய 7 தமிழ் அறிஞர்களில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு.வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, லட்சுமி ஆகிய 5 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் இசைவு அளிக்கவில்லை.
ஜெ.ஆர்.ரங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்றாவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவைகளைப் பெற்றுள்ள சிறந்த தமிழ் எழுத்தாளரான ராஜம்கிருஷ்ணன், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வேண்டுகோளை ஏற்று தனி நேர்வாகக் கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி மரபுரிமையர் ஒருவருமில்லாத காரணத்தால் அவருக்கு 3 லட்சம் ரூபாய் பரிவுத் தொகை வழங்கிடவும் முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணைகளின் பயனாக மொத்தம் 22 தமிழ் அறிஞர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு மொத்தம் 84 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.