தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்ட விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக இனைந்து விட்டதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆளும் எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியை தக்க வைக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். அதாவது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் பாதி எண்ணிக்கை அரசுக்கு வேண்டும். கணக்கு படி,
மொத்தம் இடம் - 234
காலி இடம் - 1 (ஆர்.கே.நகர்)
திமுக - 89
காங்கிரஸ் - 8
முஸ்லிம் லீக் - 1
தினகரன் அணி -19
அதிமுக கூட்டணி - 3
எடப்பாடி அணி - 113
ஆக, தற்போதைய நிலவரப்படி ஆட்சிக்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏக்களும், எதிராக 120 (89+8+1+19+3) எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள். ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டு இந்த 120 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தால், அவரின் அரசு கவிழ்ந்துவிடும் எனத் தெரிகிறது.
ஆனால், சட்டசபைக்கு வராமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது, சட்டசபைக்கு வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பது, நடுநிலைமையாக செயல்படுவது, மாற்றி வாக்களிப்பது என கடைசி நேரத்தில் எம்.எல்.ஏக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்குமா? தொடருமா? என்பது தீர்மானிக்கப்படும்.