தமிழகத்தில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
இந்தியா முழுவதும் கோடைக்காலம் நடைபெற்று வந்த நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. இடையே வங்க கடலில் ஏற்பட்ட புயலால் பல பகுதிகளில் நல்ல மழையும் பெய்தது. தற்போது கோடைக்காலம் முடிவை நெருங்கியுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலடுக்கில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூரில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.