ஒரு பக்கம் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் ஆன்லைன் பாடங்கள் இல்லாததாலும் ஆன்லைன் பாடங்களை கற்க செல்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாததாலும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சுபிக்ஷா. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பள்ளியில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை படித்து வருகிறார்
இந்த பாடங்களை அவரால் புரிந்துகொள்ள முடியாமல் தவித்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் புரியாமல் போனால் பத்தாம் வகுப்பில் அதிக அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாதே என்ற கவலையில் சுபிக்ஷா சில நாட்களாக இருந்திருக்கிறார்
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பதும் இதற்காக இவர் முதலமைச்சர் பழனிச்சாமியின் கைகளால் பரிசு பெற்றவர் என்றும் குறிப்பிடத்தக்கது ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்ட மாணவியால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது