தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்பதற்குதடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தென்காசியில் 100 மூட்டைகள் குட்காப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா ஊழல் விவகாரத்தில் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகளில் இருந்து அதிமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் பெயர் வரை சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முக்கிய ஆதாரமாகச் சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. பல இடங்களில் வருமான வரிச் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கு சம்மந்தமாக சில உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும், குட்கா உற்பத்தியாளர்களையும் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் குட்கா விறபனை முழுவதும் தடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்திருக்கும் வேலையில் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் குட்கா பொருட்கள் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் மற்றும் நாமக்கல்லில் ஆட்டோவில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில்பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடப்போகத்தி என்ற கிராமத்தில் உள்ள ஒரு கிடங்கில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் குட்கா பொருட்களை பதுக்கியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.