முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரிலேயே பிருந்தா காரத் உத்தப்புரம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் தலித்துகளுக்கும், உயர் ஜாதியினருக்கும் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில், உத்தபுரம் தலித் மக்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான பிருந்தா காரத் இன்று சென்றார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் போலீசார் அவர்களை திடீரென வழிமறித்து கைது செய்ததாக தகவல் வெளியானது. ஆனால், பிருந்தா காரத் கைது செய்யப்படவில்லை என்றும், காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் மதுரை சரக காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரிலேயே பிருந்தா காரத் உத்தரப்புரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் உத்தப்புரம் செல்லவேண்டாம் என்று பிருந்தா காரத்துக்கு எடுத்துக் கூறினோம். தற்போது உத்தப்புரத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.