45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவு முடிவடைவதால் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தயாராக உள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை தமிழக கடல் பகுதியில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்ததால், மீன் விலை அதிகரித்து காணப்பட்டது.
மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவு முதல் முடிவடைவதால் தமிழ்நாடு முழுவதும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வதற்கு தயாராகி வருகின்றனர். மீன்களை மொத்தமாக வாங்குவதற்காக வெளிமாநில மீன் வியாபாரிகள் சென்னை காசிமேடு, பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் குவிய தொடங்கியுள்ளனர்.
விசைபடகு மீனவர்களிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து மீன்களை தங்களுக்கு கொடுக்கும்படி பதிவு செய்துள்ளனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
மீன்பிடி தடைகாலத்திற்கு பிறகு, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய சூறா, பெரிய வஞ்சிரம், வரிச்சூரை, மயில்கோலா, புள்ளிகலவான், டைகர் இறா போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்று மீனவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.
தமிழக கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்ததும் வரும் 15ஆம் தேதி முதல் கேரளா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் கடலில் மீன்பிடி தடைகாலம் தொடங்குகிறது. எனவே அந்த மாநிலத்தில் உள்ள மீன் வியாபாரிகள் தமிழ்நாட்டிற்கு மீன்வாங்குவதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.