சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் - காவல்துறையினர் இடையே நடைபெற்ற வன்முறை மோதலைக் கண்டித்து கடந்த 13 நாட்களாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள், தங்களின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதையடுத்து சென்னை பார் கவுன்சிலில், இன்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள், ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கை பாரபட்சமானது என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் கூறினர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
தவிர சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹேமந்த் லட்சுமண் கோகலேவின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் வழக்கறிஞர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
தற்போது நிலவும் சூழ்நிலையில், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.