நிமோனியா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம்
, வெள்ளி, 26 ஜூன் 2009 (11:30 IST)
பொதுவாக குழந்தைகளை அதிகம் தாக்கும் நிமோனியா காய்ச்சலானது ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலால் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவோம்.ஆனால் போதிய அளவு ஊட்டச்சத்து இல்லாமை, பிறக்கும் போதே எடை குறைவு, அதிக நெருக்கடியான பகுதிகளில் வாழ்வது, பிரத்யேக தாய்ப்பால் கொடுப்பதை அறியாமை போன்ற காரணங்களினாலும் நிமோனியா காய்ச்சல் ஏற்படுவதாக சென்னையில் இந்நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை ரோட்டரி சங்கம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நிமோனியா காய்ச்சலை முற்றிலுமாக தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று சென்னையில் தொடங்கின. இதற்கான சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.
நிமோனியா காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால், உயிர்க்கொல்லி நோயாக அது மாறாமல் குழந்தைகள் உயிரிழப்பை வெகுவாகத் தடுத்து விட முடியும் என்று இந்த சுவரொட்டியை வெளியிட்டுப் பேசிய தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி தெரிவித்தார்.
நிமோனியா நோய்த் தடுப்புக்கு சிகிச்சையும், மருந்துகளும் உள்ளன என்பதை மக்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், மருந்துக் கடைகளுக்குச் சென்று தாங்களாகவே குறிப்பிட்ட அறிகுறிகளைச் சொல்லி மாத்திரை வாங்கி உபயோகிப்பதை நிறுத்த வேண்டும் என்றார்.
படித்தவர்களே கூட இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள். உடலுக்கு நோய் என்று வந்தால், உரிய மருத்துவர்களிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டாலே, நிமோனியா போன்ற நோயை தடுக்க முடியும் என்றார் ஸ்ரீபதி.
உலக அளவில் நிமோனியா நோய்க்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் உயிரிழஓப்பதாகவும், சுமார் 15 கோடி குழந்தைகள் இந்நோயால் பாதிப்புக்குள்ளாவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 4 கோடியே 30 லட்சம் குழந்தைகள் அடங்குவர். உலக அளவில் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழப்பதாகவும், அவர்களில் இந்தியாவில் 2 லட்சம் குழந்தைகளும், தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் குழந்தைகளும் ஆண்டு தோறும் உயிரிழப்பதாகவும் மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்தார்.
போதிய ஊட்டச்சத்து இல்லாமை, சுற்றுப்புறம் மாசுபடுதல், எடை குறைவான குழந்தைகள், பல காரணங்களினால் தாய்ப்பால் கொடுக்காத நிலை ஆகியவற்றால் நிமோனியா நோய்த் தாக்குதல் ஏற்படுவதை மக்கள் மத்தியில் தெரியப்படுத்துதல் அவசியம் என்றார் அவர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போலியோ நோய் ஒரு மிகக்கொடிய நோயாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் 99 விழுக்காடு அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முற்றிலுமாக போலியோ ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் சுப்புராஜ் கூறினார்.
தமிழக அரசுடன் இணைந்து இந்த விழிப்புணர்வுப் பிரசார இயக்கத்தை தொடங்குவது சிறந்த சேவையாகும் என்று ரோட்டரி சங்க ஆளுநர் ஏ. சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
நிமோனியா நோய் குணப்படுத்தக்கூடியதே என்றும், நிமோனியா என்பதை கண்டறிந்து விட்டால், அதற்கு உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றி விடலாம் என்றும் குறிப்பிட்ட அவர், நிமோனியா ஒழிக்கப்பட வேண்டும் என்பதே இந்த பிரசார இயக்கத்தின் நோக்கம் என்றார்.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, ரோட்டரி இண்டர்நேஷனல் 3230-ஆவது மாவட்ட ஆளுநர் ஏ. சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.