தேக்கடியில் 39 உடல்கள் மீட்பு: 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
தேக்கடி , வியாழன், 1 அக்டோபர் 2009 (11:08 IST)
தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து பலியான 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.தமிழக-கேரள எல்லையில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் அமைந்துள்ள தேக்கடி, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாகும். தேக்கடியில் 35 கி.மீ சுற்றளவு உள்ள பெரிய ஏரியில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த படகு சவாரியின்போது, தேக்கடி வனவிலங்கு சரணாலய பகுதியில் இருந்து நீர் அருந்த வரும் யானை கூட்டங்கள், மான், கரடி போன்ற வன விலங்குளையும், இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்க முடியும். இதற்காக கேரள அரசு சார்பில், 75 பேர் பயணம் செய்யும் இரண்டு அடுக்கு படகுகள் உள்பட பல்வேறு படகுகள் விடப்படுகின்றன.இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், அங்கு ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொள்வார்கள். தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல்நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வார்கள். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்படும்.நேற்று மாலை 4 மணி அளவில், சுற்றுலா துறைக்கு சொந்தமான இரண்டு அடுக்கு படகு, 80 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஏறத்தாழ 7 கி. மீ தூரம் வரை இயற்கை காட்சிகளை ரசித்தபடி அவர்கள் பயணம் செய்தனர். தேக்கடி வனவிலங்கு சரணாலய பகுதியில், மனகாவலா என்ற இடத்தில் சென்றபோது, யானைகள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டு இருந்தன. படகில் இருந்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்க்கும் ஆர்வத்தில், படகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியை நோக்கி சென்றனர்.இதனால் ஒரே பக்கமாக படகு சாய்ந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கும், இங்கும் ஓடியதால், படகு தண்ணீரில் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. உடனே படகில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்பினர். நீச்சல் தெரிந்தவர்கள் தண்ணீரில் குதித்து நீந்த தொடங்கினார்கள்.சிலர் படகில் இருந்த டயர் டியூப்களை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்தபடி அலறினார்கள். 'ஒயர்லெஸ்' கருவி மூலம் கேரள மாநில வனத்துறை மற்றும் சுற்றுலா துறைக்கும் அந்த படகு கவிழ்ந்தது பற்றி தகவல் அனுப்பப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறை-சுற்றுலா துறை பணியாளர்கள் அதிவேக மீட்பு படகுகளில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர்.மீட்பு பணியில், மாநில அரசுக்கு உதவுவதற்காக, கடற்படையை சேர்ந்த 50 நீச்சல் வீரர்களைக் கொண்ட குழுவினரும் கொச்சியில் இருந்து தேக்கடிக்கு விரைந்தனர். தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த வர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் 39க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரிதாபமாக இறந்துவிட்டனர். அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. பலியானவர்களில் 8 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள். மேலும் பலர் இந்த துயர விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டு இருந்த 40 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக, இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் தெரிவித்தார். மீட்கப்பட்ட 19 பயணிகள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.தேக்கடி படகு விபத்தில் பலியாகி அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவர்களில் 14 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தவிர டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் சேர்ந்த மேலும் 15 பேர் உடல்களும் இரவில் அடையாளம் காணப்பட்டது.பலியானவர்களின் 31 பேரின் விவரம் தற்போது தெரியவந்துள்ளது. ஷலிகா (30), பர்து சர்மா (17), ஆல்கா (18), பிரதீப் குமார், ரேணுகுமார், ஹரிந்திர சிங் (45), சங்கீதா ஆகியோர் டெல்லியை சேர்ந்தவர்கள்.ஹைதராபாத்தை சேர்ந்த சுனில் குமார், அவரது மகன் சாய் மனாசி, குன்டூரை சேர்ந்த ரவிந்திர வர்மா என்று தெரியவந்துள்ளது.பெரியகுளத்தை சேர்ந்த இலக்கியா (13), பிரகதீஸ்வரி (9), சத்யா (20), விஜயா (17), தரணி, ஜெயபிரகாஷ், அவரது மனைவி சத்யா ஜெயபிரகாஷ், மதுரையை சேர்ந்த சினேகா (12), கோவையை சேர்ந்த அருண் குமார் (42) என்று தெரியவந்துள்ளது.ஆத்தியா (27) சுதா (35), விஜயபிரகாஷ் (44), ராகுல் (8), சூர்ய பிரகாஷ் (45), ராஜசேகர் ஆகியோர் பெங்களூரூ, கர்நாடகத்தை சேர்ந்தவர்கள்.அனுப் பண்டரி (45), தீபக் குமார், தாஸ் நிர்மல் (61), அவரது மனைவி கல்பனா தாஸ், தாஸ் மீரா ஆகியோர் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கேரள அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.இதனிடையே விபத்து நடந்த பகுதியை கேரள வனத்துறை அமைச்சர் பினாய் விசுவம் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேக்கடி பறவைகள் சரணாலயம் அருகே படகு கவிழ்ந்ததில், பள்ளிக்கூட குழந்தைகள் 22 பேர் பலியானார்கள். அதன்பிறகு நடைபெற்ற பெரிய படகு விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.