Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும்: ராமதாஸ்

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும்: ராமதாஸ்
நெல்லை , செவ்வாய், 15 டிசம்பர் 2009 (09:21 IST)
''தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால், நிர்வாகத்திறன் மேம்படும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

நெல்லையில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்த அவ‌ர், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி, ஏற்கனவே நான் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறேன். பிரிப்பது தவறு இல்லை. அப்படி பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 32 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு உள்ளன.

சென்னையைப்போல மதுரையிலும் ஒரு தலைமை செயலகம், உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இருப்பது தவறு இல்லையே. அப்படி இருந்தால் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

ஆந்திராவில் தெலுங்கானா மாநிலம் கேட்பது 40 வருட போராட்டம். அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாயாவதி கூறி இருக்கிறார். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பா.ம.க. சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக மாதிரி பட்ஜெட் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் விவசாயிகளுக்கு தனியாக மாதிரி பட்ஜெட் 2 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு உள்ளது. சமூக பொருளாதார மேம்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தயார் செய்து வைத்து இருக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்பார்கள். ஆனால் எங்களால் காமராஜர் ஆட்சியை விட சிறந்த பொற்கால ஆட்சியை தர முடியும்.

விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையை 2 ஆக பிரித்து நீர்ப்பாசனத்துக்கு என தனியாக அமைச்சரகம் அமைக்க வேண்டும். தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும். அதேபோல் கல்வி வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது கல்வித்துறை 2 ஆக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆரம்ப மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தனி அமைச்சரகம் தொடங்க வேண்டும்.

இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் 49 ஓ-வை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்து இருக்கிறோம். வந்தவாசி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ம.க. செயல்படவில்லை.

பா.ம.க.வை பொறுத்தவரையில் குறைந்தபட்ச செயல் திட்டம் அடிப்படையில் கூட்டணி அமைப்பது இல்லை. தொகுதி உடன்பாடுதான் வைத்து இருந்தோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வருகிற 2011ஆம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் எ‌ன்று ராமதாஸ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil