Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு - ஜெயலலிதா அறிவிப்பு

Advertiesment
தமிழகம்
, வெள்ளி, 11 அக்டோபர் 2013 (09:15 IST)
FILE
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 10 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மக்களின் குரலே மகேசனின் குரல்” என்று பேரறிஞர் அண்ணா வகுத்துக்கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் “மக்களுக்கு செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி” என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில்,..

அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 சதவீதம் உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம்பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால், சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.2,292 கோடியே 78 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil