செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டது.இன்று வழக்கம் போல் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் ஆட்டோக்களிலும், நடந்தும், பஸ்சை பிடித்தும், சைக்கிள்களிலும், பெற்றோரின் பாதுகாப்புடனும் பள்ளிகளுக்கு வந்தனர்.இன்று காலை சுமார் 9 மணியளவில் தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தொலை பேசி தகவலை அடுத்து அனைத்து தனியார் பள்ளிகளும் பரபரப்பானது. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செயின்ஜோசப் மெட்ரிக் பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மெட்ரிக் பள்ளி, தூயகொலம்பா மேல்நிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாமிஷன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எஸ்டிஏ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு எதும் தெரியாத வண்ணம் ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து.....
காவல்துறை அதிகாரிகள், மோப்பநாய், பாம் ஸ்குவாடு என பள்ளிகளில் வந்து சோதனை மேற்கொண்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்த பெற்றோர்கள் பரபரப்புடன் கதறியபடியும் அழுது கொண்டும் அந்தந்த பள்ளி வாயில்களில் நின்று கொண்டும் தங்களி பிள்ளைகளை வெளியில் அனுப்பும் படி கோஷமிட்டனர். வெடிகுண்டு புரளியை அடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தலைமை ஆசிரியர்கள் சமாதானம் செய்தும் பெற்றோர்கள் சமாதானம் அடையாதநிலையில், பள்ளி தலைமையாசிரிர்கள் காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு செங்கல்பட்டு தனியார் பள்ளிகள் வெடிகுண்டு புரளியை அடுத்து பெற்றோர்கள் வாசலில் வந்துகூடியுள்ளனர் என தெரிவித்ததன்பேரில் அதிகாரிகள் பள்ளிக்கு விடுமுறை விடும்படி கூறினர்.
இதனையடுத்து செங்கல்பட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறைவிடப்பட்டது. மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பள்ளிக்கு வந்து காத்திருந்த பெற்றோர்கள் தங்கள் பிளள்ளைகளை அழைத்துச்சென்றனர். ஆனால் கிராமத்தில் இருந்து பேருந்துகளை பிடித்துவரும் மாணவ மாணவிகளும், ஆட்டோக்களில் வரும் மாணவ,மாணவிகளும் அவதிக்குள்ளாயினர்.குறிப்பாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த ஒரிரு வாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு புரளி வரும். வழக்கம் போல் மோப்ப நாய், பாம் ஸ்குவார்டு, காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு எதும் கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் தொலைபேசி தகவல் புரளி என்பது தெரியவரும். மேலும் தொலைபேசி எண்ணை பார்த்தால் பப்ளிக் டெலிபோன் பூத்தில் இருந்து வந்திருக்கும்.
ஆனால் இன்று வெடிகுண்டு புரளி வந்ததை அடுத்து அனைத்து தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். மேலும் இத்தகவலால் செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலையங்களில் மாணவ,மாணவிகள் நின்றிருப்பதை கண்டு பெரும் பரபரப்பு சூழ்ந்தது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்,இதே போன்று புரளியை ஏற்படுத்தி அமளியை உருவாக்கி அச்சுறுத்தியவர்களை காவல்துறையினர் கண்டுபடித்து பாரபட்சமினறி நடவடிக்கை மேற்கொண்டால் தான் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியும். பள்ளிக்கு அனுப்பிய சிறிது நேரத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளதாக கூறி அழுது புலம்பினர்.