ஈழப் போர் முடிவு பெறவில்லை என்று கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் கையாலாகாமல், இலங்கையில் நடந்து வரும் இனஅழிப்பை கைகட்டி வேடிக்கை பார்க்கும் கும்பலாகத்தான் இருக்கிறோம் என்று வேதனை தெரிவித்தார்.
செங்கல்பட்டில் நடந்த இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து பேசிய அவர், தமிழக வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்று, ஒட்டு மொத்த விடுதலை சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது என்றார்.
பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர் என்றும் ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் வேதனை தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் எழுச்சிக்கு பின்னரும் போராட்டத்தின் விளைவாகவும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் அது மகிழ்ச்சி இல்லை. இதைவிட மிக முக்கியமானது ஈழத்தில் நம் தமிழ்இனம் கொன்று குவிக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் நம்மை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும் போது என் இதயம் குமுறுகிறது என்றார் திருமாவளவன்.
தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்கள் இருந்தும் கையாலாகாமல், கைகட்டி வேடிக்கை பார்க்கும் கும்பலாக இருக்கிறோம் என்றும் ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும், விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்சே அரசு செய்துள்ளது என்றும் குற்றம்சாற்றினார்.
யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள் என்று குற்றம்சாற்றிய திருமாவளவன், விளம்பரத்திற்காக நான் போராடவில்லை. உள்ளத்தில் ஏற்பட்ட காயம், கொந்தளிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து போராட்டம் நடத்தினோம் என்றார்.
எம்.ஜி.ஆர். காலத்திற்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தும் ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு ஒருநாளாவது குரல் கொடுத்தது உண்டா என்று கேள்வி எழுப்பிய திருமா, தேர்தல் சமயத்தில் மட்டும் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று கேட்டார்.
ஈழப் போர் முடிவு பெறவில்லை என்று கூறிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஆயுதம் ஏந்தா விடுதலைப் புலிகள் என்றார்.