வீட்டில் எல்லோருடனும் சகஜமாக பேசிப் பழகாமல் தனித்திருப்பதுதான் இதன் ஆரம்ப நிலை. இதைப் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவரது சுபாவம் அப்படி என்று சொல்லிவிடுவார்கள்.ஆனால் இப்படியே சென்று கொண்டிருந்தால் உங்கள் குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.இதையே பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சிலர் செய்வது உண்டு. யாருடனும் பேசாமல், பழகாமல் தனித்திருப்பது. அவர்கள் உண்டு. அவர்கள் படிப்பு உண்டு என்றிருப்பதில் தவறில்லை. ஆனால் இந்த உலகத்தில் நாம் தனித்தே வாழ்ந்து தனித்தே போவதில்லை. எல்லா விஷயத்திற்கும் யாராவது ஒருவரை சார்ந்துதானே இருக்க வேண்டும்.இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. அதற்காக ரயிலிலும், பேருந்திலும் பக்கத்தில் பயணிப்பவர்களுடன் ஊர் கதைப் பேசச் சொல்லவில்லை. ஒரு நாளில் பல மணி நேரங்கள் கழிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களுடன் ஒரு நட்புணர்வை பாராட்டாமல் இருக்கக் கூடாது என்று கூறுகிறோம்.இப்படியேதான் இவர்கள் மற்ற உறவினர்களுடனும், பணிக்குச் செல்லும் இடத்திலும் இருப்பார்கள். இதைத்தான் சமூக அச்சம் என்று கூறுகிறார்கள்.
இந்த சமூகத்தில் கலந்து பேசி பழக ஒரு அச்சம் இவர்களுக்குள் இருக்கும். இது தேவையற்ற அச்சம் என்பதை முதலில் உணர வேண்டும்.
சமூகத்தின் மீது எப்படிப்பட்ட அச்சம் இவர்களுக்கு இருக்கும் என்பதனை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.