வரும் 2020ஆம் ஆண்டில் வயதானவர்களில் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முதல் 5 இடங்களில் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் வயதானவர்களுக்கு மனோநிலை பாதிக்கப்படுவது அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோநிலையில் குறிப்பாக ஞாபகசக்தி குறைவதால் ஏற்படுவதே புத்திசுவாதீனம் ஆகும். வயதாவதால் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. பல நோய்களினாலும் மனோநிலை பாதிப்புக்குள்ளாகிறது.
வயது மூத்தவர்களில் மனோநிலை பாதிப்புடன் கூடியவர்களைக் கொண்ட நாடுகளில் சீனா மற்றும் இந்தியா முதல் 5 இடங்களில் வருவதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் தற்போது 2 கோடியே 40 லட்சம் பேர் மனோநிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. வளர்ந்த நாடுகளைப் பொருத்தவரை இந்நோய்க்கு முக்கிய கவனம் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியா, சீனா நாடுகளில் இந்நோய் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை கூட்டுக்குடும்பங்கள் இருந்த நிலை மாறி, கணவன் - மனைவி, குழந்தைகள் என்ற மைக்ரோ அளவிலான சிறிய குடும்பங்கள் பெருகி வருகின்றன.
இதன்காரணமாக வயதானவர்களுக்கு மனரீதியில் பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.
மனோநிலை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையுடன் சமூகரீதியிலான ஆதரவும் அளிக்க வேண்டியது அவசியமாகும்.