கனவுகள் மனிதனின் அந்தரங்கமான ஒன்று. கனவுகள் இல்லையெனில் புராணங்கள் இல்லை தொன்மங்கள் இல்லை. கனவுகள் மனித குலத்தின் வரமும் சாபமும் ஆகும். இனிய கனவுகள் விழித்தவுடன் மனிதர்களுக்கு புத்துணர்வை அளிக்கக்கூடியவை. புதிதான ஒரு உலகத்தை நமக்குக் கிடைக்கச் செய்பவை கனவுகள் ஆகும்.
ஆனால் கனவுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவை என்று மேற்கத்திய உலகம் கருதுகிறது. அதன் விளைவு... கனவுகளைக் கட்டுப்படுத்த புதிய முறையை ஜெர்மானிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மூளைக்குள் ஒருவிதமான மின்சார அதிர்வுகளை முறையாக செலுத்தி துர் சொப்பனங்களைக் கூட துலக்கமான கனவுகளாக மாற்ற முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் உரிமை கொண்டாடுகின்றனர்.
அதாவது மின்சார அதிர்வுகளை மூளைக்குள் செலுத்திவிட்டால் நாம் கனவுதான் காண்கிறோம், என்று நமக்கு தெரியும், கனவில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் நாம் முன் கூட்டியே அறிந்து விடுவோமாம். விஞ்ஞானிகள் இதனை கோரியுள்ளனர்.
சினிமாவின் மைல் கல்லைத் தொட்ட 'இன்செப்ஷன்' என்ற திரைப்படம் இதனை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். லியானார்டோ காப்ரியோ முக்கிய நடிகராக அதில் பங்காற்றியுள்ளார்.
அதாவது அந்தப் படத்தில் அடுத்தவர்களின் கனவுக்குள் புகுந்து தங்களது கருத்துக்களை அதில் புகுத்தி தகவல்களை திருடுவது என்பது அந்தப்படத்தின் மையம்.
ஆனால் ஜெர்மானிய விஞ்ஞானிகள் அந்த அளவுக்குச் செல்லவில்லை. நாம் நமது கனவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றே கூறுகின்றனர்.
கனவுகளில் நம் ஆசை பூர்த்தியடைகிறது என்று பிரபல உளப்பகுப்பாய்வு நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இனி கனவுகளில் வெளிப்படும் ஆசையையும் நாம் கட்டுப்படுத்திவிடலாம்.