மனநோய் ஏன் உண்டாகிறது?
-டாக்டர் வேதமாலிகா M.D., M.S. (Psycho)., M.H.D.Sc., (cli.psy), Ph.D., D.Sc.,(pa.psy) Hypno (U.S.A.)
அன்பின்மையே (அ) அந்த அன்பை வெளிக்காட்ட தெரியாமையே பெரும்பாலும் பல மனப்பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது. பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை பாதிக்கப்படுகிறது. அதேப்போல, பெற்றோரின் அரவணைப்பு அதிகமாக கிடைக்கும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது! எப்படி என்கிறீர்களா? இதோ....
சினேகாவுக்கு வயது ஒன்பது. எந்த காரியத்தையும் தானாக செய்து கொள்ளத் தெரியாது. செய்தாலும் சரியாக வராது. பல்விளக்க அம்மா வேண்டும். குளிப்பாட்டிவிட அக்கா வேண்டும். ஸ்கூல் புத்தகங்கள் அடுக்கி பையில் போட்டு தர யாராவது வேண்டும். அவளாக எதையாவது செய்தால் பயம் வந்துவிடும். சின்ன சின்ன கேள்விகளுக்குக் கூட யாரையாவது கூப்பிடுவாள். பக்கத்து வீட்டு லஷ்மியை பார்க்கையில் சினேகாவுக்கு வியப்பாக இருக்கும்.
லஷ்மியும், சினேகாவும் ஒரே வகுப்பு, ஒரே வயது. காலையில் லஷ்மி எழுந்து அழகாக வாசல் தெளித்து புள்ளி வைத்து கோலம் போடுவாள். ரங்கோலி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்க்கலாம். குழந்தை என்ன அழகாக கோலம் போட்டிருக்கிறாள் என்று வியந்து போவார்கள். லஷ்மி தானே எழுந்து குளித்து விட்டு, தோட்டத்தில் பூ பறித்து தொடுத்து சாமிக்கு போட்டுவிட்டு அம்மாவுக்கு காபி கலந்து கொடுப்பாள். புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு தம்பிக்கு முத்தம் கொடுத்து அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் லஷ்மியை பார்க்கையில்... சினேகாவுக்கு வியப்பாக ஏன் சற்று பொறாமையாகக் கூட இருக்கும்.
லஷ்மி கலகலவென்று சினேகிதிகளிடம் பேசி சிரிப்பாள். சிநேகா உம்மென்று ஜன்னலை வெறித்தபடி தனியாக உட்கார்ந்திருப்பாள். படிப்பிலும் லஷ்மி படு சுட்டி. இத்தனைக்கும் ட்யூஷன் கூட கிடையாது.
சிநேகா... இளவரசிபோல் வளர்க்கப்படுகிறாள். தவமிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்று அனைவரும் அவளை தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சின்ன துரும்பைக் கூட அவள் எடுத்துப் போடவிட மாட்டார்கள். நேரத்துக்கு ஒரு டிரஸ், வேளைக்கு ஒரு விளையாட்டு பொம்மை, நாளுக்கு ஒரு நகை, பட்டு என்று வாழ்க்கை காஸ்ட்லியாக போனது. சினேகாவும் பெருமையின் உச்சத்தில்தான் இருந்தாள். அனால் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் பிறரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்த பின்... அவளுக்கு இந்த தைரியம் போயே போய்விட்டது. தன்னால் மற்றவர்களைப்போல் ஏன் ஸ்மார்ட்டாக இருக்க முடியவில்லை? ஒரு சின்ன வேலையைக் கூட நம்மல் செய்ய முடியவில்லையே என்ற கவலையும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் வந்துவிட்டது.
தொட்டதற்கெல்லாம் பயம் வந்து விடும் சினேகாவுக்கு. குழந்தை தனியே தோட்டத்திற்கு போகிறான் பார் என்று அதட்டியபடி ஓடி வரும் பாட்டி. காபி குடித்த டம்ளரை கழுவப்போனால்.. ஐயோ நீ வேலையெல்லாம் செய்யக் கூடாது கண்ணு. சின்னக் கை சிவந்து கன்னிப் போய்விடும் என்று திடுக்கிடும் அம்மா. ஓடிப் பிடித்து விளையாடும்போது கூட குழந்தைக்கு என்ன ஆகிவிடுமோ என்று கண்காணிக்கும் அத்தை.
இந்த அதிகக் கண்காணிப்பு சினேகாவுக்கு மூச்சு முட்டியது. சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை. அவளுக்கே அவள் மேல் நம்பிக்கை வரவில்லை. இந்தக் கவலையின் விளைவு, கல்வியை பாதித்தது. அவளுக்கு பாடத்தில மனசு பதியவில்லை. மற்றவர்களெல்லாம் சிறகடித்து சிட்டுக் குருவியாக பறந்து திரியும்போது, தான் மட்டும் தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியாக, சிறகடிக்கப் பயப்படும் சின்னப் பறவையாக, பயமே வாழ்க்கையாக ஆகிவிட்டதே என்று தவித்தாள். அவள் பிடிவாத குணம் பள்ளியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எதிலும் தனக்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். கிடைக்காத போது கண்மண் தெரியாமல் கோபம் வந்து அடித்து விடுவாள். உங்கள் பெண்ணின் நடத்தை சரியில்லை என்று அடிக்கடி வீட்டிற்கு ரிப்போர்ட் வரும். படிப்பும் நாளுக்கு நாள் தேய்ந்து கடைசியில் அவள் பெயில் ஆகிவிட்டாள்.
ஏன் இப்படி நடந்தது என்று சினேகா என்ன மண்டுவா! அறிவில்லையா, திறமையில்லையா, அழகில்லையா, எதில் குறை? வைக்காத டியூஷனா, வாங்கித் தராத புத்தகமா? என்று கலைப்பட ஆரம்பித்தாள் சினேகாவின் அம்மா.
அதிக கண்டிப்பால் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தாள் பத்மா. அளவுக்கு மீறிய செல்லம் தந்து குட்டிச்சுவராக்கினாள் சினேகாவின் தாய் தேவி!
குழந்தையும் ஒரு பூச்செடிதான். தன்னம்பிக்கை, தைரியம் என்கிற கதிரொளி பட்டால்தான் அதன்திறமைகள் வளரும். இந்த பிடிவாத குணம் சினேகாவுக்கு வர அவள் பெற்றோரே காரணம். வாழ்க்கை எப்போதுமே ரோஜா படுக்கையாக இருக்காது.
அந்த பாதையில் கல்லும் இருக்கும். முள்ளும் இருக்கும். அதில் நடக்க கால்களுக்கு வலுவூட்ட வேண்டும். அடுத்தவரை கைபிடித்துக் கொண்டு காமெல்லாம் நடக்க முடியுமா?
அதாவது ஒரே குழந்தை இருக்கும் வீட்டில் இத்தகைய பிரச்சினைகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. பிள்ளைகளை வீட்டின் கஷ்ட நஷ்டங்கள், பொறு ப்புகள் தெரிந்தவர்களாக வளர்ப்பதே ஒரு தாய் செய்ய வேண்டிய சரியான செயல்.
அது அவள் கடமையும்கூட. இன்று நீங்கள் உங்கள் பெண்ணை கையில் ஏந்தி சீராட்டலாம். நாளை!அதை நினைத்துப் பார்த்தீர்களா? பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை தனித்து நின்று செயல்பட வேண்டும். யாரும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தைரியமாக தன் காலில் நின்று வாழ்வின் சவால்களை சந்திக்க வேண்டும். இல்லாவிடில்... அந்த சாவல்கள் திடீரென்று எதிர்படும்போது... உங்கள் குழந்தை மிரண்டுவிடும். தன்னம்பிக்கை இழந்து தவித்துவிடும். தேவையா?
அறிவிற் சிறந்த சாதனைகளை படைக்கும் அமெரிக்க குழந்தைகளை பாருஙகள். 12 வயதிற்கு மேல் ஒவ்வொரு குழந்தையும் வீட்டை விட்டு வெளியே சென்று தானே வேலை செய்து தானே படித்துக் கொள்ளும். தன் வாழ்க்கையைத்தானே அமைத்துக் கொள்ளம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதற்கு மழலையிலேயே ஊட்டப்பட்டு விடுகிறது.
அங்கே எத்தனையோ குறைகள் இருக்கின்றன என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. யார் இல்லை என்றது? அம்மாவின் அரவணைப்பு கிடைக்காமல் பொம்மைக் கரடியை அணைத்துக் கொண்டு தூங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அதேநேரம் அன்புடன் அதே நேரம் பிறரை சார்ந்திருக்காமல் வளர்க்கப்படும் அருமைக் குழந்தைகளும் இருக்கிறார்கள். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.
நமக்கு ஊன்றுகோல் ஏந்தும்
குழந்தைகள் வேண்டாம்
உள்ள உறுதியுடன் தானே
செயல்படும் குழந்தையே தேவை
இதை மனதில் கொண்டு அன்புடன், அளவான பராமரிப்புடன் நல் வழிகாட்டி குழந்தைகள் தன் திறமைகளை தானே வளர்த்துக் கொண்டு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர நல் வழிகாட்டுங்கள். உள்ளத்தில் உறுதியை ஊட்டுங்கள். சரியா?