மும்பையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக அளவு பணத்தை இழந்து விட்ட ஏராளமானோர் தற்போது மன அழுத்தத்திற்கு ஆளாகி, மனோதத்துவ நிபுணர்களை அணுகி ஆலோசனை பெற்று வருகிறார்கள்.
கடந்த 6 மாதத்திற்கு முன் 20 ஆயிரம் புள்ளிகளாக இருந்த மும்பை பங்குச் சந்தை - சென்செக்ஸ் குறியீடு தற்போது 8.400 புள்ளிகளாக சரிந்து விட்டது.
சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாது ஏராளமான பிரபல பெரிய நிறுவனங்களின் பங்குகளும் கூட கடும் சரிவை எதிர்கொண்டுள்ளன.
வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் உள்ள நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் மிகக் குறைந்த அளவே வட்டி கிடைப்பதாகவும், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றும் பேராசை கொண்ட பலர், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து விட்டு தற்போது தலையில் கையை வைத்துக் கொண்டு தவிக்கிறார்கள்.
சிலர் பெண்ணின் திருமணத்திற்காக அரசு வேலையில் இருந்து தாமாக முன் வந்து ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் ரிடையர்மெண்ட் பலன்களைப் பெற்று பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து, திருமணத்தை நடத்த முடியாமல், எளிமையாக நடத்திய நிகழ்வும் மும்பையில் நடந்தேறியுள்ளது.
ஒரு ஆண்டுக்கு முன் பங்குச் சந்தை தொடர்பான மன அழுத்தத்தால் மனோதத்துவ நிபுணர்களைச் சந்திப்பவர்கள் வாரத்திற்கு ஒருவர் என்ற நிலைபோய், தற்போது அன்றாடம் ஏராளமானோர் பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக மருத்துவர்களைச் சந்தித்து வருகிறார்கள்.
கடந்த மாதத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு பங்குச் சந்தை தரகர் தனது கர்ப்பிணி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்திருப்போம்.
நாம் செய்யும் முதலீடு என்பது எதிர்காலத் தேவைக்காக, ஒருவேளை நமக்கு வாழ்நாளில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்தக் கால கட்டத்தில் உதவுவதற்காக நாம் செய்வது என்பதை இன்றைய பரபரப்பு நிறைந்த உலகில் மக்கள் நினைப்பதில்லை.
தங்கக்காசு திட்டம், தனியார் பெனிபிட் பண்ட், காந்தப்படுக்கை, பணம் இரட்டிப்பாகக் கிடைத்தல் என அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சிகரமான பெயரில் மக்களின் பேராசையைத் தூண்டும் வகையிலான பேர்வழிகள் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நிறுவனங்கள் முதலீடு திரட்டுவது என்பது அவர்களின் வியாபாரத் தேவைக்காக என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நாம் முதலீடு செய்து, அந்த நிறுவனங்களின் நிதியை வளர்க்க வேண்டுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அப்படி முதலீடு செய்து விட்டு, தற்போது போச்சே, போச்சே.. என்று அடித்துக் கொண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் திரிவது ஏன்?
சிலருக்கு தங்கள் பணம் போன கவலையில் அடிக்கடி கோபம் வருகிறது. தேவையற்ற சிறு பிரச்சினைக்கெல்லாம் டென்ஷன் ஆகி விடுகிறார்கள்.
வேறு சிலர் எதையும் வெளிக்காட்டாமல், மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அமைதியாக உள்ளனர்.
சிலர் தூக்கமின்றி தவிக்கிறார்கள். அதுபோன்ற மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களை எல்லாம், உறவினர்கள் மனோதத்துவ நிபுணர்களிடம் அழைத்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மனோநிலையை மாற்ற சிகிச்சை அளிக்கிறார்களாம் மும்பை மனோதத்துவ நிபுணர்கள்.
முதலீடு செய்து இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இனி வரும் காலத்திலாவது என்ன செய்ய முடியும்? என யோசித்து அதற்கேற்ப செயல்படலாம் எனபதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.
பணம் போனால், மீண்டும் சம்பாதிக்கலாம். உடல் நலம் போனால் வருமா? எனவே பங்குச் சந்தையைப் பற்றியே யோசிக்காமல், உங்களின் அடுத்தகட்ட செயல்பாட்டை துவங்குங்கள் என்பதே மனோதத்துவ நிபுணர்களின் கூற்று.