ஆரோக்கியமாக இருக்கும் வரை நமக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் தெரிவதில்லை. ஏதேனும் நோய் தாக்கிய பிறகுதான் நாம் ஆரோக்கியமாக இருப்பதன் அவசியத்தை உணர்கிறோம்.
வெறும் காய்ச்சல் வந்தாலே, கை, கால் சோர்வு, வாய் கசப்பது போன்றவை ஏற்படுகிறது. ஒரு வாரம் வரை நம் அன்றாட வேலைகளை செய்ய இயலாமல் போகிறோம். மனதளவில் தளர்ச்சியை உணர்கிறோம். இதே உயிரையே மாய்த்துவிடும் நோய்கள் நம்மைத் தாக்கினால், நோய் நம்மைக் கொள்வதற்கு முன்பு, நாமே பயத்தால் அல்லவா தினம் தின்ம் செத்து மடிகிறோம்.
நோய் தாக்கியதால் ஏற்படும் மன உளைச்சலால்தான் நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எந்த நோயும் 50 விழுக்காடுதான் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதனால் ஏற்படும் மன உளைச்சலால்தான் ஏராளமான நோயாளிகளின் நோய் தீவிரமடைகிறது.எனவே, நோயாளிகளின் மனதை முதலில் குணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக நாம் ஏதேனும் ஒரு சிகிச்சை பெற மருத்துவரை அணுகினால், நோய்க்கான காரணத்தைக் கூறி,இப்படி இப்படி இருங்கள், இதனை சாப்பிடுங்கள், நோய் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.
சில மருத்துவர்கள், உங்களுக்கு இப்படி ஒரு நோய் வந்துவிட்டது, இப்படி எல்லாம் செய்யும், குணப்படுத்த இத்தனை நாட்கள் ஆகும் என்று முதலிலேயே நோயாளிகளை பயமுறுத்திவிடுவார்கள். இவர்களுக்கு உரிய காலம் ஆன பிறகும் கூட நோய் குறையாது. அதற்குக் காரணம், அவர்களது மனதில் உள்ள பயம்தான்.அதேப்போல, புற்றுநோய் பாதித்தவர்களுக்கு, புற்று நோயினாலும், அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் சிகிச்சையினாலும், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். அவர்களது உருவத்தில் மாற்றம், தனது வேலைகளை செய்து கொள்ள முடியாமல் போவது, அதிகமான வலியை உணர்வது, மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்றவை ஆரோக்கியமான மனதைக் கூட கெடுத்துவிடும்.
எனவே, மருத்துவமனைகளில் பணியாற்றும் பிஸியோதெரபி நிபுணர்கள், இதுபோனற் நோயாளிகளுக்கு மன தைரியம் அளிக்க வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும். அல்லது நோயாளிகளே சிறிய சிறிய உடற்பயிற்சிகளை செய்து கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் அசவுகரியங்கள் பல களையப்படும். இரத்த இழப்பு நோயாக இருப்பின், உடற்பயிற்சியினால் இரத்த சிவப்பணுக்கள் உருவாகும். கை கால்களில் இயங்கும் தன்மை அதிகரிக்கும். நோயாளிகள் தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்ள முடியும்.நோயாளிகளின் நோயை குணப்படுத்துவதற்கு முன்பு, அவர்களது உடல் இயக்கத்தை சீராக்கி அதன் மூலம் அவர்களது மன நிலையை சரி செய்ய வேண்டும். நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை தட்டி எழுப்ப வேண்டும். இதனை மருத்துவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டியதில்லை. நோயாளிகளின் உறவினர்கள் கூட செய்யலாம். எப்போதும் நோயைப் பற்றிப் பேசி அழுகையை உண்டாக்காமல், அவர்களுக்கு தைரியம் கூறலாம்.நோயாளிகளுக்குப் பிடித்த வேலைகளை அவர்களாகவேச் செய்யச் சொல்லி தூண்டலாம். குழந்தைகளை அவர்களுடன் விளையாட விடலாம், தொற்று நோயாக இல்லாதிருப்பின் அவர்களை பொது இடங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் சென்று, அவரும் சராசரியான வாழ்க்கை வாழத் தகுதியானவர்தான் என்பதை ஞாபகப்படுத்தலாம்.
உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று உறவுபாராட்டலாம், பழைய நண்பர்களை தேடிப் பிடித்து சந்திக்கச் செய்யலாம். எப்படியேனும், அவர்கள் நோயுடன் போராட மன தைரியத்தை உருவாக்க வேண்டியது அவசியம். மனிதனுக்கு முதல் எதிரியே பயம்தான். இந்த பயத்தை மனதில் இருந்து அகற்றிவிட்டு, மன உளைச்சலை குறைத்துவிட்டு, நோயாளிகளுக்கு மன தைரியத்தையும், தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதே முதல் கடமையாகும். இதுதான் அவர்களது நோயை விரட்டும் முக்கிய சிகிச்சையாகும்.