தம்மை கேலி செய்வார்களோ என்ற அச்சம்
, செவ்வாய், 22 செப்டம்பர் 2009 (11:58 IST)
உலகத்தில் நமக்கு எல்லாமே புதிதுதான். அது பழகும் வரை. பிறக்கும் குழந்தைக்கு இந்த உலகமே புதிது. தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என அனைத்து உறவுகளும் புதியவர்கள். அழுதுகொண்டே இருந்தால் இவர்கள் புதியவர்களாகவேத் தெரிவார்கள். அவர்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் நெருங்கியவர்களாகிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம், நண்பர்கள், பகைவர்கள் என எல்லாமே முதலில் புதிதான். பிறகுதான் அது நட்பாகவும், பகையாகவும், நெருக்கமாகவும் மாறுகிறது. ஒரு சிலர் மாற்றங்களை எளிதாக எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் பழகி தோழமையை ஏற்படுத்திக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு இருப்பதில்லை. மற்றவர்களுடன் பேசவோ, வெளியிடங்களுக்குச் செல்லவோ தயங்குவார்கள்.இதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஒரு சமூக அச்சமேக் காரணம் என்பதை முதலில் பார்த்தோம். அந்த சமூக அச்சம் என்பது எப்படிப்பட்டது என்று இங்கு பார்ப்போம்.
சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பேசவேத் தயங்குவார்கள். அதற்குக் காரணம், வீட்டில் அவர்கள் பேசும்போது ஏதேனும் கிண்டல் செய்வது அதாவது ஏதாவது ஒரு வார்த்தையை சரியாக உச்சரிக்காத பட்சத்தில் அதைச் சொல்லி கேலி செய்வதால், வீட்டைப் போலவே இங்கும் நம்மை கேலி செய்வார்களோ என்ற பயத்தால் பேசவே தயங்குவார்கள்.சமூகத்தின் மீதான நமது பார்வை, வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், அந்த பிள்ளைகள் வெளியில் தங்களது திறமையை வெளிக்காட்ட தயங்குவார்கள். அவர்களுக்குள்ளாக ஒரு தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிடும்.
சில வீடுகளில் ஒரு பிள்ளையை வைத்து மற்றொருவரை குறை சொல்வது உண்டு. அதுவும் மிகப்பெரிய தவறு. இதனால் சகோதரத்தன்மை குறைந்து, ஒருவருக்கு ஒருவர் பகையாக மாறிவிடும். மேலும், எப்போதும் குறை சொல்லப்படும் குழந்தை நாளடைவில், தனக்கு ஏதும் தெரியாது என்று நினைத்து ஒரு பாழாகிவிடும்.உலகத்தில் எத்தனையோ பேர், எத்தனையோ விஷயங்களுக்கு தயங்குகிறார்கள். ஒரு பெண் இருக்கிறாள், அவள் எப்போதுமே ஒரு டம்ளரை இரண்டு கைகளாலும் பிடித்தபடிதான் நீர் அருந்துவாள், தேனீர் அருந்துவாள். அது அவளுக்கு பழகிவிட்டது. அவள் வளர்ந்து பெரிய பெண் ஆன பிறகும் அந்த பழக்கத்தை அவளால் மாற்ற முடியவில்லை. வீட்டில் இதுபற்றி எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பதால், அவள் வெளியிடங்களுக்கு, உறவினர் வீடுகளுக்கு எங்கு சென்றாலும், எதையும் வாங்கி குடிக்கமாட்டாள். எவ்வளவு கெஞ்சினாலும், கொஞ்சினாலும் ஒரு சொட்டு நீரையும் குடிக்க மாட்டாள். இதற்கு காரணத்தை அறிந்தபோது, அவளது பழக்கம் வெளிப்பட்டது. அவளிடம், அவ்வாறு குடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அது உன்னுடைய ஸ்டைல் என்றும் அறிவுறுத்தி புரிய வைக்க வெகு நாட்கள் ஆனது.
இதுபோல், இழுத்து இழுத்து பேசுபவர்கள், கையெழுத்து நன்றாக இல்லாதவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், ஸ்பூனில் சாப்பிடத் தெரியாதவர்கள், டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடத் தெரியாதவர்கள் என்று எத்தனையோ விஷயங்களுக்காக பலர் இந்த சமூகத்தின் மீது அச்சப்படுகின்றனர். இதனால் நாம் நண்பர்கள் முன்னிலையில் அல்லது உறவினர்கள் முன்னிலையில் அவமானப்பட வேண்டி வருமோ என்று அச்சப்படுகின்றனர்.இந்த அச்சம் இருக்கும் வரை, உங்களது குறையும் உங்களிடமேத்தான் இருக்கும். அச்சத்தை விடுத்து வெளியே வாருங்கள். எந்த விஷயமும் தெரிந்து கொள்ளும்வரை புதிதுதான், தெரியாததுதான், ஆனால் அதையே நீங்கள் பழகிவிட்டால், உங்களுக்கு அது அத்துப்படி என்று மற்றவர்கள் பாராட்டத் தவறமாட்டார்கள். எனவே, சமூக அச்சத்தை துச்சமாக நினைத்து, வெளியே வாருங்கள். இங்கு விரிந்து பரந்து கிடகும் பூமி உங்களை வரவேற்கும்.