Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கப்படி

-மு‌கில‌ன் ‌பி.

பொங்கப்படி
, திங்கள், 14 ஜனவரி 2008 (22:00 IST)
webdunia photoWD
ராஜி அக்காவுக்கு பொங்கல்படி கொடுக்க வேண்டும், பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வர முடியுமா எனக் கேட்டு அம்மாவிடமிருந்து போன் வந்ததிலிருந்து சங்கரானந்துக்கு பொங்கல்படி குறித்த பழைய நினைவுகள் சுற்றிச் சுழலத் தொடங்கிவிட்டன.

சங்கரானந்த் வீட்டோட தெரு நீளமானது.தெருவில் இரு பக்க வரிசையில் இருக்கும் ஒவ்வொரு வீடும் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெள்ளை பூசிக்கொண்டு, மினுக்கிக் கொண்டிருக்கும்.சிலரது வீடுகளில் ஜன்னல், கதவுகளில் மட்டுமல்லாது சுவற்றிலும் காணப்படும் பெயிண்ட் பூச்சு, அந்த வீட்டு பவுசைக் காட்டும்.

அப்பவெல்லாம் தெருவோட தோற்றமே மாறிப்போய்விடும்.பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமிருந்தாலும் அப்பவே பொங்கல் பண்டிகை கொண்டாட்ட எண்ணம் வந்துவிடும்.

ஆனால் பொங்கலுக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெருவில் இருக்கும் பல வீடுகளுக்கு வேனிலும், டேக்சியிலுமாக கட்டுக்கட்டான கரும்புகளுடன் பொங்கல் படி வந்திறங்குவதை பார்த்து சங்கரானந்துக்கு ஏக்கமாக போய்விடும்!

போதும்போதாதற்கு பொங்கல்படி வந்திறங்கும் வீட்டிலிருக்கும் இவனது சேக்காளிகள், " பாத்தியாடே ?!... எங்க வீட்டுல எவ்வளோ கரும்புன்னு " சொல்லி வெறுப்பேத்துவார்கள்.அந்த வாண்டுகள் சொல்வதும் உண்மைதான் !

பொங்கல்படி என்றால் அந்த தெருவில் வாக்கப்பட்டு வந்த பெண் குடும்பத்தினருக்கு இருக்கும் வசதியை பொறுத்து, பொங்கல்படியின் பவுசு வெளிப்படும்.வசதிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்றால் மெட்டடார் வேனின் மேல் நாலைந்து கரும்பு கட்டுகள்.அரைக்கோட்டை, ஒரு கோட்டை என சாக்கு மூட்டையில் பச்சரிசியும், புழங்கலரிசியும்.அது போல வெல்லமும் சிப்பமாக வரும். அப்புறம் இருக்கிற காய்கறிகள் எல்லாம் ரகத்திற்கு ஒரு கிலோ வீதம் தனியா ஒரு சாக்கு மூட்டையில். அப்புறம் பயறு, பருப்பு வகைகள், மசாலா சாமான்கள், தேங்காய், வாழைப்பழத்தார், இலைக்கட்டு, சப்பு சவறு என இறக்க முடியாமல் இறக்குவார்கள்.

இப்படி கொண்டாந்து இறக்கினால்தான் அந்த தெருவில் வாக்கப்பட்ட வந்த பெண்ணுக்கு கவுரதையாக இருக்கும். பார்ப்பவர்களும் மூக்கில் மேல் ஒற்றை விரலை வைத்து, "பாத்தியாடி, புஷ்பக்கா மருமவளுக்கு வந்திருக்கிற பொங்கப்படிய!" என பெருமை பேசுவார்கள்.

அதிலும் தலப்பொங்கப்படி என்றால் கேட்கவே வேண்டாம்.இன்னும் அமளிதுமளிப்படும். அண்டா, கொப்பரை என பாத்திர சீரும், பொண்ணு மாப்பிள்ளைக்கு புதுத் துணியும், இன்னும் வசதிபட்டால் செயின், மோதிரம் எனப் போகும்.

தலப்பொங்கப்படியோடு சேர்த்து குறைஞ்சது மூணு பொங்கலுக்காவது இதே மாதிரி கொடுத்தாவணும்.தலப்பொங்கப்படிக்கு மெட்டடார் வேனில் வருபவர்கள்,ரெண்டாம் பொங்கப்படிய பிளசர் காரிலும், மூணாம் பொங்கப்படிய ஆட்டோவிலுமா கொண்டாருவாங்க !அப்படித்தான் பொங்கப்படியோட வரிசை குறைஞ்சுக்கிட்டு போகும்.

அதுக்குப் பிறகு கட்டிக் கொடுத்த பொண்ண புருஷங்காரன் வச்சு வாழுற லட்சணத்தை பொறுத்து இந்த பொங்கப்படி தொடரும்.மூணு பொங்கலுக்கு முன்னாடியே மாப்பிள்ளையோட குட்டு வெளிப்பட்டு போனால், "அந்த மூதிக்கு பொங்கப்படி ஒரு கேடா" என பொண்ணு வீட்டிலிருந்து வசவுப்படிதான் வரும்.

ஒழுங்கா வச்சு வாழ்ந்தால், பொங்கப்படி சாமான் வராட்டாலும் ஆயிரமோ அல்லது ஐநூறோ என பணமாக மகள் பெயருக்கு மணியார்டராக வந்து சேரும்.அல்லது பக்கத்து ஊரென்றால் நேரில் வந்து கொடுத்து விட்டுப் போவார்கள்.

இந்த வகையான பொங்கப்படி பொண்ணு வீட்டுக்காரவுங்களே மனசு நெறஞ்சு செழிப்பாக் கொடுக்கறது. இன்னொண்ணு வகையும் இருக்கு.வாக்கப்பட்டு வந்த பொண்ணோட மாமியார் பொங்கப்படிக்கு என்னவெல்லாம் கொண்டு வரணும் , எதது எத்தனை படி... எத்தனை கிலோ வேணுமுன்னு லிஸ்ட்டு போடாத குறையாக வாயாலேயே அடுக்கிவிடுவார்.இதில் ஒரு சாமான் குறைந்தாலோ அல்லது கிலோ குறைந்தாலோ போச்சு ! பங்கராட்டம் ஆடி விடுவாள் மாமியாக்காரி!

"வக்கத்தவ வீட்டுல பொண்ணு எடுத்தா இதான்! மேல வீட்டு நீலாவப் பாரு... என்னப்போலத்தான் இட்டடியில இருந்து பொண்ணு எடுத்திருக்கா... வந்து இறங்குது பாரு பொங்கப்படி, சனம் மூக்கு மேல விரல வைக்காப்ல!

நமக்கும் வந்து வாச்சிருக்கே...! இவங்கிட்ட அப்பவே சொன்னேன்... இந்த பொண்ணு வேண்டாம்டா பாக்கத்தான் சேப்பு தோலா இருக்கா ...முழிக்கிற முழி சரியில்லைன்னு. கேட்டானா ? தோலு சேப்பா இருக்குனு மயங்கி கெட்டிக்கிட்டான்.இப்ப... ? ஒழுங்கா ஒரு பொங்கப்படியக் கூட கொடுக்க வக்கில்லன்னு காட்டிப்புட்டாங்க !

இப்பவே இப்படியின்னா நாளைக்கு ஒரு மேடு பள்ளம்னா எப்படி கைத்தாங்குவாங்க? " என வசவுகள் நீளும்!

ஆனால் சோதனைக்கு, அந்த மாதிரியான மாமியாருக்கு வரும் மருமகளது வீடுதான் கொஞ்சம் வசதி குறைச்சலா இருக்கும்.வசதியா பொங்கப்படி வந்து இறங்குற வீடுகள்ல்ல பொதுவா அதைப் பெருசா கண்டுக்காதவகளாத்தான் இருப்பாங்க!

இது ஒரு வகை என்றால், மற்றொன்று பெத்த பெண்ணே அப்பன் வீட்டிலிருந்து முடிஞ்சமட்டும் வாரிக்குவிக்கிறது.அதே தெருவில் அவளைப்போலவே வாக்கப்பட்டு வந்தவளுக்கு வரும் பொங்கப்படிய விட தனக்கு வர்றது ஒண்ணும் குறைஞ்சதில்லைன்னு பவுசுக் காட்ட, பொங்கப்படி பட்டியலை தானே போட்டு அனுப்பி விடுவாள்.அப்படியும் மனசு கேளாமல், எங்கே கொஞ்சமாக் கொண்டு வந்துடுவாங்களோன்னு பயத்துல, இவளே அம்மாக்காரிக்கிட்ட கண்ண கசக்கி, "நான் சொன்னதுல ஒண்ணும் குறைஞ்சாலும் என் மாமியாக்காரி என்னக் குத்தி பேசுவா" என இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி அப்பாவி மாமியார வில்லியாக்கி விடுவாள்!

இவ இப்படி பட்டியல் போடறது தெரிஞ்ச புருஷங்காரன்" ஏண்டி இப்படிக் கேட்கிறே? என்னையும், எங்க அம்மாவையுமில்லா ஒங்க வீட்டுல தப்பா நினைப்பாங்கன்னு " கேட்டாக்க , " போங்க ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது " ன்னு ஒரே சொல்லுல புருஷன் வாயை அடைச்சிடுவா !

இந்த கூத்தெல்லாம் பொங்கப்படி கொடுக்கறவுகளுக்கும், வாங்குறவுகளுக்கும் இடையே நடக்குறதுன்னா, இவுகளுக்கு சம்பந்தமே இல்லாத, அந்த தெருவுல இருக்கிற கல்யாணமாகாத குமரி பொண்ணுங்க மனசை குத்தி ரணமாக்கிற சம்பவமும் நடக்கும்.

பொதுவா பொங்கப்படி கொண்டு வார பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும், அவுக சொக்கார வூட்டு ஆட்களுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோழி அடிச்சோ அல்லது கிடாக் கறி வாங்கியோ சமைச்சு விருந்து கொடுத்தாகணும்.இந்த விருந்து கொடுக்கும்போது, பொங்கப்படி கொண்டு வந்த பொண்ணு வீட்டுக்காரங்க மட்டுமில்லாம, அந்த தெருவுல இருக்கிற மாப்பிள்ள்ளை வீட்டுக்காரங்க சொக்காரங்களுக்கும் அழைப்பு போகும்.

அப்படி சாப்பிட வருகிற சொக்காரங்கள்ல்ல திருமணமாக தள்ளிப்போய்கிட்டே இருக்கிற குமரி பொண்ணுங்களும் சிலது இருக்கும்.அந்த மாதிரி பொண்ணுங்கள பார்த்தா, "என்னட்டி ஒங்க அப்பாவும், அம்மாவும் ஒனக்கு மாப்பிள்ளை கீப்பள்ளை பார்க்கறாங்களா இல்லையா ? நீ காணப் பொறந்ததுகள்ளெல்லாம் கல்யாணமாகி இப்ப பொங்கப்படி வாங்கிட்டு இருக்காளுவ... ஒனக்கு என்னடானா... " என நீட்டி முழக்குவார்கள்.

பந்தியில் நாலுபேர் பார்க்க, இப்படி பேச்சுக் கிளம்பும்போது அந்த குமரிப் பொண்ணுக மனசு படுற பாடு இருக்கே...! சொல்லி மாளாது.ஆனா இப்படி பேசுறவளோட வாயடைக்கிறமாதிரி,"நா ஒங்கங்கிட்ட கேட்டேனா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு... போவியளா சோலியப் பார்த்துக்கிட்டு..." அப்படின்னு நறுக்குன்னு பேசுற சில வாயாடி குமரிப் பொண்ணுங்களும் உண்டு.அப்படித்தான் ஒரு தடவை , கீழக்கடேசி பூவதி மகள் மங்களத்துக்கிட்டே இதுமாதிரி டோனாவூர்க்காரி கேட்டப்போ, "அம்புட்டு அக்கறையா இருந்தா ஒம்புருஷன வேணா எனக்கு கட்டி வையி " ன்னு சொல்ல பந்தியில இருந்த சனம் பூரா வாயடைச்சுப் போச்சு !

இத்தனை சங்கதி இருக்குற இந்த பொங்கப்படி வந்து இறங்குறத பார்த்துட்டுதான் ஒரு முறை சங்கரானந்த் தன்னோட அம்மாக்கிட்ட ஓடி வந்து " ஏம்மா... நம்ம வீட்டுக்கு எப்பமா பொங்கப்படி வரும்னு ? " கேட்டான்.அப்போ அவனுக்கு வயது பத்துதான்.இவர்கள் வீட்டில் இவன்தான் ஆம்பிளை. மூத்தது அக்கா ராஜி.

இப்படி இவன் அப்ப கேட்டபோது, மூணாவது வீட்டு மணிமேகலை மதினி அம்மா பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். சங்கரானந்தை மணிமேகலைக்கு " என்ன கொழுந்த பிள்ளை? ன்னு எப்பவும் வம்புக்கு இழுக்கிறதுதான் வேலை. இவன் வேற இப்படி கேட்கவும், மணிமேகலை மதினி ஓவென சிரித்தார்கள்... கூடவே அம்மாவும் சேர்ந்து சிரிக்கவும் இவனுக்கு தான் ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டோம் என வெக்கமாப் போயிடுச்சி.

விடுவாளா மணிமேகலை மதினி ...?" அதுக்கென்ன கொழுந்த பிள்ளை ? நீ இன்னைக்கே என்னக் கல்யாணம் கட்டிக்க... நாளைக்கே ஒங்க வீட்டுக்கு எங்க அப்பாவ பொங்கப்படி கொண்டார சொல்லுதேன் " என சிரித்துக் கொண்டே சொல்ல, இவனுக்கு இன்னும் வெட்கமாகப் போய் அங்கிருந்து ஓடியே விட்டான் !

அப்புறமாத்தான், "கல்யாணமான பெரிய பையன்களுக்குத்தான் பொங்கப்படி வரும்னு" அம்மா சொல்லி தெரிஞ்சுது சங்கரானந்துக்கு.

சங்கரானந்த் இப்போ வேலை பார்ப்பது திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ.வில்.தாழையூத்து சங்கர் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்து, இரண்டு வருடம் ஊர் சுற்றிய பின்னர் ஜூனியர் இன்ஜினியர் வேலை கிடைத்தது. அப்பா உயிரோடு இருக்கும் வரை வீட்டு பொறுப்புகள் ஏதுமின்றி கவலையின்றி இருந்த சங்கரானந்துக்கு அப்பா காலமானதுக்கப்பறம், வீட்டில் இவன்தான் ஆம்பிளை என்பதால், எல்லா பொறுப்பும் இவன் தலையிலதான்.

அக்கா ராஜிக்கு இவனோட வேலை செய்யுற பன்னீர் செல்வத்தோட அண்ணனதான் பொறுப்பா பார்த்து கட்டி வைச்சான். அவங்களுக்கு ஊரு ராஜவல்லிபுரம். லிண்டாஸ் விளம்பர கம்பெனில மாப்பிள்ளை லாங்வேஜ் ஹெட். பாம்பேலிருந்து பொங்கலுக்கு மாப்பிள்ளையும், அக்காவும் போன மாசக் கடேசிலேயே வந்துட்டாங்க.

"நம்ம வீட்டுக்கு எப்பமா பொங்கப்படி வரும்?"ன்னு கேட்ட சங்கரானந்த் இப்ப அக்கா ராஜிக்கு பொங்கப்படி கொடுக்க கிளம்பிக்கிட்டு இருக்கான்.ஆனா அடுத்த பொங்கலுக்கு அவன் ஆசைப்பட்டபடியே அவன் வீட்டுக்கு பொங்கப்படி வந்துரும். அதான் ரெட்டியார்பட்டியில இருக்கிற கலாவை சங்கரானந்துக்கு இந்த தைல பேசி முடிக்கப் போறாங்களே..!




Share this Story:

Follow Webdunia tamil