Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் எதுக்கு ஐநாவுக்கு…?

நான் எதுக்கு ஐநாவுக்கு…?

கவிமகன்

, ஞாயிறு, 13 மார்ச் 2016 (22:30 IST)
ஓடுங்கள் ஐந்து பேர்
ஒற்றுமையுள்ள தமிழன் என்று
ஐநா முன்றலில் நின்று
உரிமைக்காக குரலிடுங்கள்


 
 
கத்துங்கள் கதறுங்கள்
உங்கள் உடலிலே தீயை மூட்டி
எரிந்து சாகுங்கள்
 
நாங்கள் உங்கள் தீயிலே
ஐரோப்பா குளிருக்கு
கூதல் காய்கிறோம்
கடும் பனி மூட்டத்தை
பிரிந்த உங்கள் உயிர்
சூட்டால் காத்து கொள்ளுங்கள்
 
நாங்கள் சுப்பர் சிங்கர்
பார்த்து தினமும் ஐந்து
வாக்கிடுவோம் எங்கள்
ஈழ பிள்ளைக்கு
அவன் வென்றால்
ஈழத்துக்கு பெருமை
ஐநா வந்தால் என்ன பெருமை
தூங்கி கிடக்கும் ஐநாவை
தட்டி எழுப்ப முடியுமா?
 
உங்கள் ஐந்து குரல்கள்
வெந்து போய்விடும்
சிங்கத்தின் கூலிகளும்
பந்தா காட்டும் மனிதர்களும்
வந்து சேருவரே உங்களோடு
பந்திக்கு முந்தும் தமிழர்
பிந்துவாரே இச் செய்தி கேட்டு
ஊருக்கு போகவேண்டும்
வந்தவன் படமெடுத்து
மைத்திரிக்கு அனுப்பிவிட்டா
நாலாம் மாடிக்கா போறது நாம்…
 
எதுக்கு நமக்கு வம்பு
செத்தவன் செத்துப்போட்டான்
காணமல் போனவனும் எங்கோ
மறைந்து விட்டான்
இனி எதுக்கு ஐநா மன்றம்
ஊரில் உள்ளவனுக்கு எதுக்கு நீதி
நான் நலம் என் பெஞ்சாதி நலம்
மருத்துவ பிள்ளைகள் இரண்டும் நலம்
நமக்கெதுக்கு ஊர் வம்பு
வேலைக்கு போயி வந்து
வேளைக்கு உணவு உண்டு
காலுக்கு மேல கால போட்டு
மானாட மயிலாட பார்க்க
காலம் எனக்கு
போதவில்லை
ஐநாவுக்கு நான் வந்து என்ன பு….க போறன்?
 
உங்களோடு சேர்ந்து நானும்
கூச்சலிட்டு என்ன பயன்?
கவலை இருப்பதாக
வெளிகாட்டி ஒரு நாடகமாடி என்னபலன்?
 
வெள்ளைகள் முன்னால்
தாயகபற்று என்று நான்
மார்தட்டி நடப்பதென்ன?
எங்கள் உறவுகள் ஊரில்
செத்து மடிகிறார் என்று உரைத்தும்
பலனில்லை
மைத்திரி ஆட்சியிலும்
காணாமல் கிடக்கிறது எம் உரிமை
என உரக்க கோசமிட்டும் பயனில்லை
மரணத்தில் வாழுது ஈழம்
என்று சொல்லி எதை கண்டீர்?
 
ஒன்றி இருக்கா நானும் இங்கே
ஒற்றுமையை பேச வந்தேன்
மானமுள்ள தமிழ் பற்றில் நின்று
மரணிக்கும் தமிழை
மனச்சாட்சி இல்லாமல் நானே கொல்வேன்
தமிழை நான் பேச மாட்டேன்
பிள்ளைக்கும் சொல்லி தரேன்
நான் வாழும் மொழியே என்
தாய் மொழியாய் தத்தெடுத்தேன்
பிறகெதுக்கு எனக்கு இது
 
காணாமல் போனவன் மனைவி
கத்துகிறாள் வீதியில் நின்று
உலகத்தை திரும்பி பார்க்க
நீதி ஒன்று வேண்டுகிறாள்
அப்பா பைக்கில் ஏறி பள்ளிக்கு
செல்ல என்று அழுகுது சின்ன பிள்ளை
அண்ணாவை காண என்று
தங்கை நாட்டில் கதறுகிறாள்
பிள்ளைக்கு சோறு ஊட்ட
பெற்றவள் நின்று துடிக்கிறாள்
இதனால் எனக்கு என்ன?
 
அதுக்காக நான் ஏன் அழனும்
எனக்கு ஒன்றும் ஆகவில்லை
என் உறவுக்கும் ஏதுமில்லை
அத்தனை சொந்தங்களும் நாங்கள்
புலம்பெயர்ந்து வாழுகிறோம்
விசா பெற்றோம் ஈழ அவலம் சொல்லி
பெற்றுவிட்டோம் நிரந்தர வாழ்வுரிமை
இனி எதுக்கு நமக்கு இது
வாழ்வோம் நம் குடும்பத்தோடு
வீண் அலைச்சல் நமக்கெதுக்கு
லீவும் ஒன்று வீணா போகும்
பயணப்பணம் அநியாயமாகும்
மனதில் இவை அரிப்பதாலே
மூடி கொண்டு நானும் போறேன்
ஞாயிறு ஸ்பெசல் ஒரு புரியாணி உண்பதற்கு…

Share this Story:

Follow Webdunia tamil