Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்கள் சாவுகளா உங்கள் கலவியின் உச்சம்...?

எங்கள் சாவுகளா உங்கள் கலவியின் உச்சம்...?

கவிமகன்.இ

, செவ்வாய், 8 மார்ச் 2016 (17:11 IST)
நிழல்கள் தீண்டிய மனவறை
நியங்களின் தாண்டவத்தால் 
நிசப்தமாகி கிடக்கிறது
 
நிரூபனமாகிவிட்ட சில
நிறுவல்கள் நியத்தை தாண்டி
நிகழ்காலத்தை கூறுகின்றன
 
இறக்க போகும் என் எதிர்காலம் 
நடப்புக்காலத்தால் ஆழப்படுகிறது
 
இறந்த காலத்தின் வடுக்களும் 
வரும் காலத்தின் ஏக்கமும் 
பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது 
 
தலைவிரி கோலமாய் எழுந்து 
எதிர்காலம் அச்சமூட்டுகிறது
பிணைத்திருக்கும் பிணம் 
தின்னும் கழுகுகளின் கர
வலிமையை எண்ணி 
திராணியற்று போகிறது
 
எதிரியின் நெஞ்சம் 
பாட்டுக்கும் கூத்துக்கும் ஏப்பம் 
விடும் ஆட்சியர் கூட்டத்தின் 
நிர்வாணமான ஆட்சியை
நினைத்து உடல் நடுங்குகிறது
 
மறைக்கப்பட வேண்டிய மானம்
துகிலுரியப்படும் அச்சம் தோன்றுகிறது
 
கொடி பிடித்து கோடியில் புரளும்
கொத்தடிமை கூட்டத்தின்
நீண்ட நகங்களின் தீண்டுதல்கள்
கண்டு திக்கித்து கிடக்கிறது
எமது உயிர்.



 

 
 
நக கீறல்களில் இருந்து பீறிட்டு 
வரும் குருதி சிதறல்களை
நக்கி ருசிக்கிறது ஆட்சிப்பீடம்
 
நாங்கள் வலியில் துடிக்க 
சுகம் தரும் மருந்தென்று 
கிழிந்த புண்ணில் பெற்றோலை
ஊற்றுகிறது
 
வஞ்சகம் நாங்கள் தாங்கி கொண்டோம்
நாங்கள் அனைத்தையும் தங்கிகொண்டோம்
கம்பி வேலிகளுக்குள் வேயப்பட்ட
கூரை குடில்களுக்குள் 
வேலிகளற்று கிடக்கிறது ஈழதமிழ்
 
நீதிகளற்ற சுக போகர்களால் 
பெண்மைகள் விலைபேசப்படுகின்றன
வரலாறு ஒன்றுக்காய் வீடு விட்டு 
நாடு விட்டு சாவின் விளிம்பில்
ஏறி வந்து நிக்கிறான் ஈழ அகதி
 
மனிதம் எங்கள் சாவின் மீது 
கட்டப்பட்ட கயிற்றில் ஏறி
சுகமாக ஊஞ்சல் படுக்கை கொள்கிறது
 
சுகங்கள் அற்று திறந்த சிறையில்
விலங்குகள் அற்ற விலங்குகளாய்
உயிரை மட்டும் கொண்டலையும்
எங்கள் ஏக்கங்களின் விடியல்
விடியாமலே கிடக்கிறது
 
எங்கள் வைகறை விடியல் 
வஞ்சகத்தால் மௌனித்து கிடக்கிறது..
 
எங்கள் கிழக்கு சிவந்து 
வைகறை விடியும் போது
தெரியும் சிங்களத்தின் 
பாதம் பணியும் பசப்பு
நரிகளின் துரோகத்தனம்
அதுவரை நாங்கள் செத்து கொண்டே 
இருக்கிறோம்
செத்தபின் கவிஞர்களே எம்மை 
பாடுங்கள்...
 
ஊடக வல்லுனரே எங்கள் சாவுகளை 
உரக்க கூறுங்கள் 
செய்திகளுக்கிடையில் விளம்பரங்களை
அள்ளிப்போடுங்கள் 
நீங்கள் வளம் பெறுவீர்கள்
 
எங்கள் பிணங்களோடு ஒரு செல்பி
சமூகவலை போராளிகளே 
உங்களுக்கு பல லட்சம் லைக்குகள் 
பல்லாயிரம் பகிர்வுகள்
அப்போதும் ஈழத்தமிழன் புன்னகையோடு 
பிணமாய் கிடப்பான் 
எங்கள் அன்புக்கினிய நல்லாட்சியே...
 
எங்கள் சாவுகளே உங்கள் 
கலவிகளின் உச்சம் எனில் 
எங்கள் சாவுகளை நீங்கள் 
தாராளமாக வன்புணருங்கள்
எங்கள் விழிகளை மூடி உங்கள்
சுகங்களுக்காக நாங்கள் பிணமாகி போகிறோம்...
 
 
கவிமகன்.இ

Share this Story:

Follow Webdunia tamil