Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாதுமாகி! - அன்னையர் தின சிறப்புக் கவிதை!

யாதுமாகி! - அன்னையர் தின சிறப்புக் கவிதை!
, புதன், 13 மே 2015 (19:45 IST)
(வன்னி மண் மீதான நில ஆக்கிரமிப்புப்போரில் உயிர் குடிக்கப்பட்ட பல ஆயிரம் பெண்களுக்கும், தாய்மாருக்கும் இக்கவிதை உணர்வர்ப்பணம்!)

யாதுமாகி! - அன்னையர் தின சிறப்புக்கவிதை!
 
இடம்பெயர்தலின் வலி பற்றியும்
மரணங்களை எண்ணிக்கொண்டிருத்தல் 
பற்றியும்
பேசிக்கொண்டிருக்கும் ஈழத்தில்,
தாய்க்குலம் தம் சேலை உருவி 
கூடாரம் அமைத்தும்,
சாக்குப்பைகளாக பொத்தி
தடுப்புச்சுவர் அமைத்தும்
நம் சரீரம் காத்த
தியாகம் பற்றியும் பேசுகிறேன்.
 

 
ஆகாயத்தை விடவும்
அழகானதும், விசாலமானதும் ஆன
பொருள் உண்டென்றேல், 
தாய்மாரே 
அது நிச்சயம் உங்கள் சேலை தான்.
 
மல்லாக்காக 
படுத்துக்கொண்டே 
உங்கள் சேலையில் உள்ள 
வட்டங்களையும் சதுரங்களையும்,
கோணங்களையும் கோடுகளையும்,
புள்ளிகளையும் பூக்களையும்,
பட்சிகளையும் பறவைகளையும்,
கிறுக்கல்களையும் கீறல்களையும்,
பார்த்துப்பார்த்து 
தொட்டுப்பேசி,
பல ஆயிரம் குழந்தைகள் 
சித்திரமும் கணிதமும் 
கற்றிருக்கிறார்கள்.
 
துப்பாக்கிச்சன்னங்களும்
எறிகணைச்சிதறல்களும்
உங்கள் சேலையை 
சல்லடை இட்டபோதும், 
பொத்தல்கள் வழி 
“இன்னுமோர் உலகத்தைக்காட்டி”
முடிந்தவரை
எம் அவல வாழ்வை 
அழகாக்க உழைத்திருந்தீர்கள்.
 
மொத்தத்தில்,
சேலையை சோலையாக்க
நீங்கள் காட்டிய 
சிரத்தை போல் பரிசுத்தம், 
இவ்வுலகில்
வேறொன்றுமில்லை.
***

அ.ஈழம் சேகுவேரா

Share this Story:

Follow Webdunia tamil