ஒவ்வொரு சோற்று பருக்கையிலும் உழைப்பின் வேர்வை!
தமிழ்நிலம்
மகிழ்ச்சி பொங்க
சேற்றில் குளித்த தேகத்துடன்
பாதமும், கைகளும் பட்டு
செழித்த விளைநிலம்
குளத்து நீரையும்
ஆற்றுநீரையும் குடித்து
பச்சை மிளகாயும்
வெங்காயமும் கடித்து
கேப்பங் கூழை உண்டு
பெருக்கிய தானியங்கள்
விஷப்பூச்சிகளிலும்
விஷ முட்களிலும்
சிக்கி தாக்குண்டு
விளைந்த காய்கனிகள்
வலிகளை
விளைச்சலில் மறந்துவிட்டு
மற்றவரின்
வாழ்வாதாரத்திற்காய்ப்
பாடுபடும் வர்க்கம்
உழைப்பின் முகத்தை
உழவனிடம் பார்க்கலாம்
அதிகாலையின் சுறுசுறுப்பை
விவசாயிடம் கேட்கலாம்
வறுமையை மூடி தாழிடவும்
பசிக்கு உணவளிக்கவும்
இருக்கும் ஒரே திறவுகோல்
தமிழனின் ஒவ்வொரு
சோற்று பருக்கையிலும்
உழைப்பின் வேர்வை
உள்ளதென்பதை
மறுக்க முடியுமா?