Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்தச் சாபத்தை நானும் வழிமொழிகிறேன்

Advertiesment
அந்தச் சாபத்தை நானும் வழிமொழிகிறேன்

ஜோசப் ராஜா

, வியாழன், 26 நவம்பர் 2015 (20:25 IST)
அதிகாரிகளாக வருகிறார்கள்
அமைச்சர்களாக வருகிறார்கள்
ஆளுங்கட்சியினராக வருகிறார்கள்
எதிர்க்கட்சியினராக வருகிறார்கள்
எல்லோரும் வருகிறார்கள்..
 
வெள்ளம் வரவர
வந்துகொண்டே தானிருக்கிறார்கள்
நானும் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்..
 
எந்த மழைக்கும் எந்த வெள்ளத்துக்கும்
இவர்களில் யாரும் ஒருபோதும்
மனிதர்களாக வருவதேயில்லை
 
பலநூறு வருடங்கள் பழமையான ஏரிகள்
பல ஆண்டுகளுக்கு பின் முழுமையாக
நிரம்பி வழிகின்றன
ரசிக்க முடியவில்லை
 

 
ஏரிகளைச் சுற்றிக் குடியிருக்கும் மக்களின்
பயங்கலந்த முகங்களை
பல ஆண்டுகளாகக் காய்ந்து கிடந்த
பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன
ரசிக்க முடியவில்லை
 
போட்டதைப் போட்டபடி ஓடுகிறார்கள்
ஆற்றங்கரை மனிதர்கள்
விட்டது விட்டபடி தப்பிக்கிறார்கள்
தாழ்வான பகுதிவாசிகள்
 
webdunia

 
போச்சு போயேபோச்சு அவ்வளவும் போச்சு
சிறுசேமிப்பும் பெருஞ்சேமிப்பும்
வெள்ளத்தோடு போச்சு
துணிமணிகள் தட்டுமுட்டுச் சாமான்கள்
அத்தனையும் நாசமாய்ப் போச்சு
குழந்தைகளின் பெண்களின் வயதானவர்களின்
கூக்குரலும் ஓலமும் காற்றில் நிறைந்து
விண்ணை முட்டத் தொடங்கியதும்
கோட்டைகளின் உறக்கம் மெல்லக் கலைகின்றது
அதிகாரம் அசைய முடியாமல் அசைந்து எழுகிறது
 
சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட வண்டிகள்
விரைந்து வருகின்றன
பள்ளம் பார்த்து வெள்ளம் பார்த்து
தகுந்த பாதுகாப்போடு
மழை வெறித்த நேரம் பார்த்து
கீழே இறங்குகிறார்கள்
அவ்வளவு கவனமாக
அவ்வளவு நேர்த்தியாக
அவ்வளவு அக்கறையோடு
எங்கே தண்ணீர் இல்லையோ அங்கே
எங்கே தண்ணீர் குறைவாக இருக்கிறதோ அங்கே
அடிமேல் அடிவைத்து அன்பொழுக கருணைவழிய
நடந்து வருகிறார்கள்
 
மேலும் அடுத்தப் பக்கம்...

அழைக்கப்பட்ட புகைப்படக்காரர்கள்
அனைவரும் வந்துவிட்டார்கள்
குடியிருப்பின் அவல நிலையை
மக்களின் கண்ணீரை
குழந்தைகளின் பயம் நிறைந்த முகங்களை
நேர்த்தியாகப் படம் எடுத்துவிட்டார்கள்
குறித்த இடத்தில் கூடுகிறார்கள் 
மந்தைகளின் எந்த விண்ணப்பங்களும்
மீட்பர்களின் காதுகளை எட்டவேயில்லை
மீட்பர்களும் கூட
காதுகொடுக்க வந்தவர்கள் மாதிரி தெரியவேயில்லை
 
பாவம் எவ்வளவு முயன்றாலும்
கோடிகளைத் தின்று கொழுத்த அந்த முகங்களில்
அதிகார போதை நிறைந்திருக்கும் அந்த விழிகளில்
குளுகுளு அறைகளில் மினுக்கேறிய அந்தக் கன்னங்களில்
சோகத்தின் அறிகுறி துயரத்தின் சாயல்
கொஞ்சமும் தென்பட மறுக்கிறது
ஆனாலும் முயன்று பார்க்கிறார்கள்
அவசியம் என்ன இருக்கிறது
வந்தவரை போதும் என்று
புகைப்படக்காரர்களைப் பார்க்கிறார்கள்
 
webdunia

 
தொலைக்காட்சிகள் மறுகணம்
ஊதுகுழல்களாக மாறுகின்றன
நேரலையாய் நேரெதிராய்
வெளுத்துக் கட்டுகிறது
அடுத்தநாள் பத்திரிக்கைக்காரர்கள்
நாங்களும் சளைத்தவர்களில்லை என்று
பக்கம் பக்கமாய் வண்ணப் படங்களில்
வெள்ள நிவாரணப்பணி செய்கிறார்கள்
 
இன்னும் ஒருபடி மேலேபோய்
மழையைக் குற்றம் சொன்ன வார்த்தைகளை யெல்லாம்
இயற்கைமீது பழிபோட்ட ஜாலங்களை யெல்லாம்
நாம் மடையர்களாய் இருக்கும்வரை
கேட்கத்தான் வேண்டும்
ஒரு ரொட்டியையும்
ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும் கொடுத்துவிட்டு
வள்ளல் சிரிப்பு சிரிப்பதை யெல்லாம்
நாம் மடையர்களாய் இருக்கும் வரை
பார்க்கத்தான் வேண்டும்
 
ஏகாதிபத்தியத்தின் காலைப்பிடித்துத்  
தொங்கிக் கொண்டிருக்கும்
நாள்பட்ட நோய் பீடித்திருக்கும்
சுயமே இல்லாத இந்த அரசமைப்பில்
சப்பையான மொண்ணையான 
இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பில்
இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பின்
மகா மட்டமான இந்த நகர அமைப்பில்
அடுத்த புயலுக்கும் நாம்
அலைக்கழிக்கப் படுவது உறுதிதான்
 
ஏனென்றால்
நகர அமைப்பு என்பது
இந்த ஆட்சியாளர்களின்
லாப நட்டக் கணக்குகளால்
லஞ்சப் பரிவர்த்தனைகளால்
ஏழை பணக்காரப் பாகுபாடுகளால்
பதவி பிடித்துவிட்ட மெத்தனத்தினால்
கட்டமைக்கக் கூடியது இல்லை
 
ஒரு நல்ல நகர அமைப்பை
பேராசை பிடித்தவர்களால்
ஒருபோதும் திட்டமிட முடியாது
பணத்தாசை பிடித்தவர்களால்
ஒருபோதும் திட்டமிட முடியாது
 
அதென்ன ஒரு பொறியியலாளனால்
செய்து முடிக்கக்கூடிய வேலையா?
அது ஒரு கலைஞனின் பணியல்லவா
நகரமென்பது வெறும்
கான்கிரீட் கட்டிடக் காடுகளா என்ன
இழப்பீடு கொடுப்பவர்களுக்கும்
இழப்பீடு கொடுக்கச் சொல்பவர்களுக்கும்
இது புரிந்துவிடுமா
 
webdunia

 
இதோ இன்னும் குறையாத
வெள்ளத்தினூடே போகிறேன் நான்
உயிர்பிழைத்து ஓடிவந்த ஜனங்களின் பெருமூச்சு
இதயத்தைக் குத்திக் கிழிக்கிறது
பொம்மையைக் கேட்டழும் குழந்தையிடம்
வீடே இல்லையென்று சொல்லமுடியாமல் தவிக்கிறாள் தாய்
 
தன்னுடைய வீட்டை
தன்னுடைய சம்பாத்தியத்தை
தன்னுடைய கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும்
தன்னுடைய மொத்த வாழ்க்கையையும்
இழந்து பாதி இறந்து
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு முதியவர்
 
வாக்காளப் பெருமக்களே என்றழைக்கும் சத்தம்
தூரத்தில் கேட்கிறது
எல்லோரும் கூடுகிறார்கள்
நிராயுதபாணியாக நிற்கும் அந்த முதியவர்
தன்னுடைய கையில் திணிக்கப்பட்ட
நிவாரணப் பையையும்
எண்ண முடியாமல் எண்ணிக் கொடுக்கப்பட்ட
ஆயிரம் ரூபாயையும் வாங்கிக் கொண்டு
அல்லற்பட்டும் ஆற்றாது அழுத கண்ணீரோடும்
சத்தமாகச் சபிக்கிறார்
 
நாசமாப் போறவங்களா
இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா
ஓட்டு கேக்கிற வேலையை
எங்களுக்கே பிச்சை போடுறீங்களாடா
 
ஒங்க அதிகாரம் பதவி பணம் காரு பங்களா பவுசு
எல்லாமே நாங்கபோட்ட பிச்சைதானடா
பிச்சக்காரப் பசங்களா
என்று வெடித்துச் சிதறினார்
ஆறும் ஒருகணம் உறைந்து நின்றது
நானும் மறுகணம் வெடித்துச் சிதறினேன்
 
வலி நிறைந்த அதிக அர்த்தம் பொதிந்த
அந்தச் சாபத்தை நானும் வழிமொழிகிறேன்
 
நாசமாப் போறவங்களா!
பிச்சக்காரப் பசங்களா!..

Share this Story:

Follow Webdunia tamil