அழகான குஞ்சுகளுக்காக
முட்டைகளை அடைகாத்தபடி
அளவற்ற ஆவலோடு அந்தக் காக்கை
பலநாள் காத்திருக்கும் அநேகமாக...
பனி, மழை, காற்று, பசி, களைப்பு வந்திருக்கும்
காக்கையின் உயிரைப் போக்கியிருக்கும் அநேகமாக...
காட்டில் ஒருநாள்
கூட்டிலிருந்த அக்காக்கையைக்
காண நேர்ந்தது.
நுனி விரல்களால் இறகுகளைத் தொட்டேன்
சலனமற்றிருந்தது.
ஊளையிட்டுக் கொண்டிருந்தது காற்று;
ஃபைன் மரங்களுக்கிடையில்
அலைந்து கரைந்தது ஒரு காக்கை;
என் சிரசுக்கு மேலே வானின் உயரே
பறத்தலின் கதியில்
பரவசங் கொண்டது ஒரு கருடன்.
நலுங்காமல் காக்கையை வெளியிலெடுத்தேன்
அடைகாத்த முட்டைகள் அடியிலிருந்தன.
அவற்றின் நிற வித்தியாசம்
சட்டென்று என்னை உற்றுப் பார்க்க வைத்தது:
கோல்ஃப் பந்துகள்!!
("Tragedy" - 1979, Toshimi Horiuchi)
நன்றி: "உள்ளுறை" - இதழ் 3.
நவம்பர்-டிசம்பர் 2009.