(பெருமாள் மணிகண்டன், சமூகவியலாளர் & அரசியல் நோக்கர்)
தேசிய கட்சி, மாநிலக் கட்சி என அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வரையறை செய்கிறது இந்திய அரசியல் சாசனம். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளில் உட்கட்சித் தேர்தலும் ஒன்று. நடைமுறையில் தேசிய கட்சிகளில் கோஷ்டி அரசியலும், மாநிலக் கட்சிகளில் ஒற்றைத் தலைமையின் ஆதிக்கமும் நிறைந்திருக்கின்றது.
பெரும்பாலான மாநில கட்சிகள், தனி நபரின் வழிகாட்டுதலால் நடத்தப்படுவனவாகவே உள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் (மேற்கு வங்காளம்), பிஜூ ஜனதா தளம் (ஒடிஷா), பகுஜன் சமாஜ் கட்சி (உத்திரப் பிரதேசம்) ராஷ்டிரிய ஜனதா தளம் (பீஹார்) போன்ற கட்சிகள் அந்தந்தக் கட்சி தலைவர்களின் ஆளுமையால் வழி நடத்தப்படுகின்றன.
சமாஜ்வாடி (உத்திரப் பிரதேசம்), அகாலி தளம் (பஞ்சாப்), தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (தெலுங்கானா) தேசியவாத காங்கிரஸ் (மகாராஷ்டிரா) போன்ற கட்சிகளில் தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புகளிலும், பதவிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மாநிலக் கட்சிகளுக்கு எனச் சட்ட திட்டங்கள் இருப்பினும், ஒற்றைத் தலைமையின் வழிகாட்டுதலும் முடிவுமே அவற்றின் பாதையைத் தீர்மானிக்கின்றன.
மாநிலக் கட்சிகளின் கொள்கைகளும், தேசிய கட்சிகளின் கொள்கைகளும் தேசிய நலன் சார்ந்த விசயங்களில் பெரும்பாலும் முரண்படுவது இல்லை. இருப்பினும் மாநிலக் கட்சிகள் இனம், மொழி சார்ந்த விசயங்களில் சற்றே கடினமான நிலைப்பாட்டினைக் கொண்டவை. மாநிலக் கட்சிகளும் தேசிய கட்சிகளும் தேவைக்கு ஏற்ப தேர்தல் கூட்டணி, ஆட்சியில் பங்கு என ஒத்த பயணத்தை மேற்கொண்டவாறு உள்ளன.
அரசியல் சாசனம், மத்தியில் கூட்டாட்சி (federal), ஒற்றையாட்சி (unitary) என இரண்டு குறித்தும் விவாதிக்கிறது, இதில் கூட்டாட்சிக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்தியா போன்று கலாச்சார, மொழி, இன வேறுபாடு கொண்ட நாட்டில், தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இருப்பதே அதன் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கும். ஊழல், அதிகார துஷ்பிரயோகம் சார்ந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளின் மீதும் கூறப்பட்டுள்ளன. சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற மது கோடா, ஓம் பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் போன்றவர்கள் தேசிய கட்சிகளைச் சாராதவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
சுமார் 18 ஆண்டுகளாக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்தது. கர்நாடகத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2014 செப்டெம்பர் 27ஆம் தேதி கூறப்பட்டது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு உடனடியாக தண்டனையும் அறிவிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, உடனடியாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா இழந்தார். மேலும் 10 ஆண்டுகளுக்குப் போட்டியிட முடியாது என்ற அடிப்படையில் முதல்வர் பதவியையும் இழந்தார். மாநில முதல்வர் பதவி இழந்ததனால் அவரது அமைச்சரவையும் பதவி இழந்தது. 2011இல் கூட்டணி அமைத்து, சட்டமன்றத் தேர்தலில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் அமைக்கப்பட்ட அதிமுக ஆட்சியின் முதல் சுற்று, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவிற்கு வந்தது.
எம் ஜி ஆர், 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல் மூலம் தனது கணக்கைத் தொடங்கிய அதிமுக, 1977ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றது. இதில் 24 ஆண்டுகள், அதிமுக தமிழகத்தில் ஆளும் கட்சி அந்தஸ்தில் இருந்தது கவனிக்கத் தக்கது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் திராவிடக் கட்சிககளான திமுக, அதிமுக இரண்டும் மாவட்டம், ஒன்றியம், ஊராட்சி எனத் துல்லியமான கட்சி அமைப்பைக் கொண்டவை. ஜனநாயகப் பரவலுக்கு இந்த உட்கட்சி அமைப்பு, பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
2011 சட்டமன்றத் தேர்தலில் நூற்றுக்கணக்கான இடங்களை அதிமுக வென்றது, அப்போது கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு ஆயிரக்கணக்கான இடங்களில் அதிமுக தொண்டர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாகத் தேர்வு பெற்றனர். கூட்டுறவுத் தேர்தலைப் பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலமெங்கும் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் லட்சக்கணக்கான பதவிகளை அதிமுக தொண்டர்கள் கைப்பற்றியது, அமைப்பு ரீதியில் அதிமுகவிற்குப் பலம் கிடைக்கக் காரணமானது. அதிமுக பொதுச் செயலாளர் மீது அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பணிவு கலந்த விசுவாசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
1989ஆம் ஆண்டு ஜெயலலிதா நேரடித் தேர்தலைச் சந்தித்து, மாநில சட்ட மன்றத்திற்குத் தேர்வு பெற்றார். அதே ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது. 25 ஆண்டுகளாக தேசிய கட்சிகள் தேர்தலுக்கு முன்னர் அல்லது தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்தே டெல்லியில் ஆட்சி அமைத்தனர். 25 ஆண்டுகளாக மாநில அரசியலில் பல்வேறு உயர்வு - தாழ்வுகளைச் சந்தித்தாலும் 2014 பாராளுமன்றத் தேர்தல் வந்த போது, பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக தனித்து, பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாரானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 பாராளுமன்ற இடங்களை வெல்வதன் மூலம் தன்னால் பிரதமர் ஆக முடியும் என்ற கருத்தை முன் வைத்துப் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. அவரது அதிமுக இதுவரை இல்லாத அளவில் 37 இடங்களை வென்று, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாகப் பாராளுமன்றத்தில் இடம் பிடித்தது. தேசிய அளவில் மோடி தலைமையில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. பொதுவாக இவ்வாறு வென்ற கட்சி, கூட்டணி ஆட்சி அமைப்பதில்லை. ஆனால், பாஜக, ஒரு கூட்டணி அரசை அமைத்தது.
தீர்ப்பு வெளியான உடன் கடைகள் அடைக்கப்பட்டன, பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களால் தங்கள் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பெற்று முதல்வராகப் பொறுப்பேற்கிற போது கண் கலங்கினார். அடுத்தடுத்து, பொறுப்பேற்ற அமைச்சர்களில் சிலர் குலுங்கிக் குலுங்கி அழுதனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் சாதாரண அதிமுக தொண்டனாக இருந்து இன்று அமைச்சர் வரை உயர்ந்த முக்கூர் சுப்ரமணியம் போன்ற சிலர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் கண்ணீரால் வெளிப்படுத்தினர்.
தங்கள் வருத்தத்தை வெளிக்காட்ட, கறுப்புச் சட்டை அணிந்து, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். திராவிடக் கருத்தியல் தளத்தில் கறுப்புச் சட்டை ஓர் அரசியல் குறியீடாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். திராவிடர் கழகத்தின் ஆரம்ப நாட்களில் எதிர்ப்பின் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்ட கறுப்புச் சட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் வருத்தத்திற்கான அடையாளமாக மாற்றப்பட்டது.
ஜெயலலிதா, ராம்ஜெத்மலானி மூலம் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தொண்டர்களில் சிலர் மொட்டை அடித்துக்கொண்டனர். மொட்டை அடிப்பது, தமிழ் மரபில் துக்க நிகழ்வு மற்றும் வேண்டுதலுடன் தொடர்பு உடையது, அத்தகைய செயலைத் தங்களது பொதுச் செயலாளர் பெற்ற தீர்ப்பிற்காகச் செய்வதன் மூலம் தொண்டன் தனது அதீத விசுவாசத்தைப் பொது வெளியில் வெளிப்படுத்துகிறான்.
மகளிர் அணியினர் பால் குடம் சுமந்து தங்கள் வேண்டுதலைச் செலுத்தினர், சிலர் மண் சோறு சாப்பிட்டனர். இதற்கு முன்னர் அதிமுக தலைமைக்குச் சில நெருக்கடிகள் வந்த போது அமைச்சராக இருந்தவர்கள் சிலர் வேப்பிலை உடை அணிந்து வேண்டினர். அதற்கு முன்னர் எம் ஜி ஆர் உடல் நலம் பெற வேண்டி, ஒருவர் தன்னைத் தானே பிணமாகப் பாவித்து வழிபாடு நடத்தினார். அதிமுக தொண்டனைப் பொறுத்தவரை நம்பிக்கை, மூட நம்பிக்கை என்றெல்லாம் யோசிப்பதில்லை, தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாகவே தொன்ம வழிபாட்டுச் சடங்குகளைக் கை கொள்கிறான், திராவிடக் கருத்தியல் தளத்தில் நின்றெல்லாம் சிந்திப்பதில்லை, அவர்கள் இவ்வளவு நாளும் 'இதய தெய்வம்' எனப் போற்றிய ஜெயலலிதாவிற்குச் சிக்கல் வந்த உடன், தங்கள் தெய்வத்தை வேண்டுகிறார்கள்.
நீதி வழியான போராட்டத்தை அதிமுக தலைமை மேற்கொள்கிற போது, தொண்டர்கள் பக்தி மரபு வழியில் தங்களது தலைவிக்காக வேண்டிக்கொண்டது, பார்ப்பவர்களுக்கு வியப்பைத் தந்தது. ஓர் அரசியல் கட்சி என்பது நவீன சமூக அமைப்பு. அதற்குள் இருக்கிற தொண்டர்கள் பழமையான முறைகளில் ஒரு நீதி மன்றத் தீர்ப்பிற்கு எதிர் வினை செய்வது, நம் மரபின் நீட்சி என்றே கொள்ள வேண்டி உள்ளது. அரசு, நீதிமன்றம் என்பதெல்லாம் நவீன குடியாட்சியின் கூறுகள். இதில் தலைவர்களாக இருப்பவர்கள், இந்த அமைப்புகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டே பணி செய்கிறார்கள் ஆனால் அவர்களைப் பின் தொடரும் தொண்டர்கள் உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் பயணிப்பது இந்திய ஜனநாயகத்தின் பண்புகளில் ஒன்று.