2014 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கூட்டணிகளும் உடைந்துவிட்டன, இரண்டு தேசிய கட்சிகள் (பாஜக & காங்கிரஸ்) இரண்டு மாநில கட்சிகள் (சிவசேனா & தேசியவாத காங்கிரஸ்) ஆகிய நான்கு கட்சிகளும் தனித் தனியாகக் களம் காண்கின்றன. சிவசேனா, பாஜக கூட்டணி சுமார் 25 ஆண்டுகளாக வெவ்வேறு தேர்தல்களைச் சேர்ந்தே சந்தித்தன, இந்த 2014 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உடைந்துவிட்டது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்திருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலால் பிரிந்தது.
குறிப்பாக, சிவசேனா - பாஜக பிரிவு, இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் பார்வையாளர்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவின் அடிப்படையில் கணிக்கின்ற போது, சிவசேனா - பாஜக கூட்டணி, சுமார் 200 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது என்றனர். 15 ஆண்டுக் கால காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் மீதான அதிருப்தி பாஜக - சிவசேனா கூட்டணிக்குச் சாதகமாகும் என நடுநிலையாளர்கள் ஆரூடம் பார்த்த வேளையில், பாஜக - சிவசேனா கூட்டணி உடைந்தது பலருக்கும் ஆச்சர்யம்.
மோடி பிரதமராகவும், அமித் ஷா பாஜக தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு வருகிற, மிகப் பெரிய மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலைப் பாரதீய ஜனதா, தனித்துச் சந்திப்பது என எடுத்த முடிவு, சற்றே தைரியமான முடிவு என்றே கொள்ள வேண்டியுள்ளது.
மகாராஷ்டிர பாரதீய ஜனதாவின் முக்கியமான OBC தலைவராகவும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஆளுமையாகவும் இருந்த கோபிநாத் முண்டே, விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார். இவர் 1995-1991 ஆண்டுக்கால பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியில், பாஜக சார்பாகத் துணை முதல்வர் பதவியை வகித்தவர். கோபிநாத் முண்டே மரணத்திற்குப் பிறகு யார் தலைமையின் கீழ் மகாராஷ்டிர பாரதீய ஜனதா, இந்தத் தேர்தலைச் சந்திக்கும் என்ற கேள்வி எழுந்தது. மாநிலத் தலைவர் தேவேந்திர பட்நவிஸ், இந்தத் தேர்தலில் பாஜகவை வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டாலும் மோடியின் பிரசாரத்தை நம்பியே பாஜக தேர்தல் உத்திகள் அமைந்துள்ளன.
சற்றே உன்னிப்பாகக் கவனித்தால், பால் தாக்கரே மரணத்திற்குப் பிறகு சிவசேனா தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட உத்தவ் தாக்கரேவை மோடி ஆரம்பம் முதலே தவிர்த்து வந்திருப்பதை அறியலாம். ஒரு சில மரபான சந்திப்புகள் தவிர இருவருக்கும் இடையில் குறிப்பிடும் படியான நல்லுறவு இல்லை. ஆனால் பால் தாக்கரே காலத்தில், பாஜகவின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றோர் அவருடன் மிகவும் இணக்கமாக இருந்ததை அறியலாம்.
தீவிரமான இந்துத்துவா பேசுகிற சிவசேனாவைப் பாஜக தவிர்ப்பது, அரசியல் அரங்கில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. சிவசேனா போன்ற கட்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் பாஜக 'வளர்ச்சி அரசியல்' எனும் தளத்தில் தனது பயணத்தைத் தொடர முடிவு செய்கிறது எனக் கொள்ளலாம், மோடியின் பிரசாரமும் மும்பை மற்றும் மகாராஷ்டிர வளர்ச்சி குறித்தே அமைந்துள்ளது. சிவசேனா போன்ற மாநிலக் கட்சிகளைத் தவிர்ப்பதன் மூலமே பாரதீய ஜனதாவை மராட்டியத்தில் வலுவாகக் காலூன்றச் செய்ய இயலும் என்கிற கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரத் பவாரது தேசியவாத காங்கிரஸ், மராட்டியத்தின் பெரும்பாலான சர்க்கரை மற்றும் கூட்டுறவு அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாராமதி, சாங்கிலி, சோலாப்பூர் போன்ற இடங்களில் பலமாக உள்ளது. 'மராத்தா பெருமை' பேசும் சிவசேனா, மும்பை போன்ற நகரங்களில் சற்றே வலுவாக உள்ளது. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம் என் எஸ்), கடந்த உள்ளாட்சி தேர்தலில் நாசிக் நகரைக் கைப்பற்றியது.
காங்கிரஸ், பாஜக இரண்டும் மகாராஷ்டிரா முழுவதும் பரவலான கட்சியாக இருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர்கள் செயல்பாடுகள் கணிக்க முடியாவையாக உள்ளன.
1960ஆம் ஆண்டு குஜராத் தனி மாநிலமாக உதயமானது. அதுவரை அது மகாராஷ்டிராவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில், குஜராத்தியர்களான மோடி, அமித் ஷா இருவரும் தலைமை இடத்தில் இருந்து மராட்டிய பாஜகவை வழி நடத்துகின்றனர். பிரதமர் மோடி சுமார் 30 பொதுக் கூட்டங்களில் பேசுகிறார், மோடி அலையை மீண்டும் ஒரு முறை துணிச்சலாகப் பரிசோதிக்கிறார்கள். மராட்டியத்தின் தேர்தல் முடிவு, பல்வேறு காரணங்களால் தேசிய முக்கியத்துவம் பெறுகிறது. 2014 அக்டோபர் 15இல் வாக்குப் பதிவு. அடுத்த நான்கு நாட்களில் முடிவு தெரிந்து விடும்.