Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியுடன் மகத்தான உறவு நீடிப்பது எப்படி?

மனைவியுடன் மகத்தான உறவு நீடிப்பது எப்படி?
, வியாழன், 19 ஏப்ரல் 2012 (13:44 IST)
WD
மிகவும் கஷ்டமான ஒரு கேள்விதான். மனைவியுடன் சுமுகமான உறவு எப்போதும் வேண்டுமென விரும்பினால், முதலில் அவரை உங்களுடைய மனைவி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதை நிறுத்துங்கள். அவரை இன்னொரு மனித உயிராகப் பாருங்கள். இப்படிப் பார்த்தால் பிறகு அங்கே எந்தப் பிரச்சனையும் இருக்காது. ‘இவள் என் மனைவி’ என்று நீங்கள் பார்க்கத் துவங்கும் கணத்திலேயே எங்கோ அவள் உங்களின் சொத்து என்றாகிவிடுகிறது. உங்களுக்குச் சொந்தமான சொத்து என்றவுடனேயே உங்களது அணுகுமுறை முற்றிலும் வேறுவிதமாக ஆகிவிடுகிறது.

ஒருவரை நீங்கள் உங்களுடைய உரிமைப் பொருளாகக் குறைத்துவிடும் கணத்திலேயே அவருடன் இணைந்து வாழ்வதில் உள்ள அழகு மறைந்துவிடுகிறது. வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம். ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தான் தெரிவாள். அவளை உங்களுடைய உரிமையாகப் பார்க்கும் காரணத்தால் அவருடைய அற்புதத்தன்மை உங்களுக்குத் தெரிவதில்லை. உண்மையில் யாரையும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உங்களுடைய மனைவியோ, உங்கள் கணவரோ, உங்கள் குழந்தையோ யாருமே உங்களுக்கு உரிமையானவர் கிடையாது. அவர்கள் உங்கள் சொத்து கிடையாது. இந்த நிமிடத்தில் அவர்கள் உங்களோடு இணைந்திருப்பதைக் கொண்டாடி மகிழுங்கள்.

‘இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்’ என்று நீங்கள் மனமார உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும். மாறாக, ‘இவள் என் மனைவி. எப்படியும் எனக்கு உடமையானவள்தான். என்னிடம் மட்டுமே இருக்க வேண்டியவள்’ என்று நீங்கள் நினைக்கும் அந்தக் கணத்திலேயே பாராட்டும், கொண்டாடுதலும் காணாமல் போய்விடும். இரண்டு உயிர்களுக்கிடையே பாராட்டும், கொண்டாட்டமும் காணாமல் போனபிறகு, அவர்களிடையே இருக்கக்கூடிய உறவுநிலையில் என்னதான் அழகு இருந்துவிட முடியும்? கணவரோ அல்லது மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கிறாரோ அவரை அந்தத் தன்மையுடனேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படியிருக்கும்?

ஆனால் அதே நேரத்தில், அவரை இன்னொரு ‘உயிராக’ நீங்கள் உணர்ந்தால், அங்கே மிக அழகான உறவு மலரும். உங்களுடைய வாழ்க்கைக்குள் பங்கெடுக்க வந்த பெண்ணை, ‘இதோ, இங்கே, இப்போது என்னருகில் இருப்பது இன்னொரு சக உயிர்’ என்ற அளவில் வெறுமனே பாருங்கள். ஒவ்வொரு கணமும் இப்படிப் பார்க்கும்போது அங்கு கொண்டாட்டம் மட்டுமே இருக்க முடியும்.

அவளுக்கு வேறு வழியே கிடையாது என்கிற ஒரு சூழலை சமூக ரீதியாக நீங்கள் உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் அவளுக்கும் சில வழிகள் இருக்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலையில் சிலர் தன்னை மாய்த்துக் கொண்டாவது கணவனுக்கான உரிமைகளை மறுத்திருக்கிறார்கள், இல்லையா? எனவே தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். யாரோ ஒருவர் சமூக ரீதியாக உங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் விருப்பத்தின் பேரில்தான் உங்களோடு தொடர்ந்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரின் விருப்பத்திற்கு நன்றி கூறி அவரையும், அவரது அருகாமையையும் மகத்தானதாகக் கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான உறவு மட்டுமே இருக்கமுடியும்.

- சத்குரு

Share this Story:

Follow Webdunia tamil