இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் ஜைன மதமும் குறிப்பிடத்தக்கது. ஜைன மதத்துறவியாக வாழ்ந்தவர் மகாவீரர். பிற உயிர்களுக்கு தீங்கறியாத நிலையே மகாவீரரின் வாழ்க்கை லட்சியங்களில் மிகவும் முக்கியமானதாகத் திகழ்ந்தது. மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சமணர்கள் மட்டுமல்லாது மகாவீரரின் போதனைகளை பின்பற்றுவோர் அனைவருமே மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை -22.04.2005) அன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
மகாவீரர் பிறப்பு:
வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு வர்த்தமானர் என்று பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர். அவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை. மகாவீரருடைய பிறந்த நாளை அவரது தந்தை மிகச் சிறப்புடன் கொண்டாடி மக்களுக்கு பல உதவிகளையும், நன்மைகளையும் செய்து வந்தார்.
மகாவீரருக்கு எல்லா கலைகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது 36-வது வயதில் மகாவீரர் உலக வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளத் துவங்கினார். இவர் 12 ஆண்டு காலம் கடும் தவம் புரிந்தார்.
பிறகு வர்த்தமானர் நாலந்தா சென்றிருந்தபோது கோசலா என்ற துறவியுடன் 6 ஆண்டுகள் கழித்தார். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் விளைவாக இவர் இத்துறவியை பிரிந்து அஜீவிகா என்னும் சமயப் பிரிவினருக்குத் தலைவரானார்.
துறவறத்தை மேற்கொண்ட பதிமூன்றாவது ஆண்டு ரிஜூபாலிகா நதியின் வடகரையில் அமர்ந்து உயர்ந்த ஞானம் பெற்றார். இதற்குப் பின் இவருக்கு கைவல்யர், எல்லாமறிந்தவர், ஜீனர் (வென்றவர்) மகாவீரர், பெருவீரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.
நிர்க்கிரந்தர் என்னும் சமயப் பிரிவிற்கு இவர் தலைவரானார். பிற்காலத்தில் அவர்கள் ஜைனர் (சமணர்) என்றும் ஜீனரின் சீடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மகாவீரர் தான் கண்ட உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்க விரும்பினார். அப்போது அவருக்கு வயது 32. முப்பதாண்டுகள் சமயப் பணியில் ஈடுபட்டு 72-ம் வயதில் தென் பீகாரிலுள்ள பாவா என்னுமிடத்தில் உயிர் நீத்தார்.
இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்கள் இடைப்பட்ட காலங்களில் தோன்றி சமண சமயக் கொள்கைகளை ஏற்கனவே போதித்தார்கள். "ரிஷபா" என்பவர் முதல் தீர்த்தங்கரராகக் கருதப்படுகிறார். இவர்தான் சமண மதக் கருத்துக்களைத் தோற்றுவித்தவர் என்று கருதப்படுகிறது. முதல் 22 தீர்த்தங்கரர்கள் பற்றிய போதுமான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. 23-வது தீர்த்தங்கரராகிய "பார்சவாத்" வரலாற்று முக்கியத்துவம் பெற்றவர். பார்சவாத் போதித்த உண்மைகள் சமண சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளாக மாறி பிரபலமடைந்தன. மகாவீரர் 24-வது தீர்த்தங்கரர் ஆவார்.
மகாவீரரின் போதனைகள் :
மகாவீரர் புதியதொரு சமயத்தை தொடங்கவில்லை என்றும், இருபத்திநான்கு தீர்த்தங்கரர்கள் வரிசையில் இறுதியானவர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள். வாரணாசியில் இளையவராய் விளங்கிய அவர், தம் சீடர்களுக்கு, தீங்கிழையாமை, உண்மை, பற்றின்மை, திருடாமை ஆகிய 4 விரதங்களைப் போதித்தார். இவற்றுடன் பிரம்மச்சரியம் அல்லது கற்பு என்னும் விரதத்தையும் மகாவீரர் இணைத்தார். ஆடைகளுக்குட்பட்ட புறப்பொருட்கள் யாவற்றையும் துறந்தார். "நம்பிக்கை, நல்லுறவு, நன்னடத்தை" ஆகிய முப்பெருவழிகளை கடைப்பிடிப்பதால், ஜீவன்கள் கூடுவிட்டு கூடு மாறும் நிலையிலிருந்து விடுபட்டு, புனிதமானதும் நிலையானதும் சித்த (சித்தசீல) நிலையை அடையலாம் என்று போதித்தார் அவர்.
அதாவது, கருப்பொருள், ஆன்மா ஆகிய 2 மூலப்பொருட்கள் மனிதனிடம் உள்ளன. அவற்றில் கருப்பொருள் அழியும் தன்மை வாய்ந்தது. ஆன்மா அழியா தன்மையுடையது. முற்பிறவிகளில் செய்த வினையின் காரணமாக ஆன்மா கட்டுண்டு கிடக்கிறது. ஆசையை நீக்கி, தீய செயல்களை செய்யாதிருப்போமாயின் ஆன்மா விடுபட்டு உயர்வடையும். புதிதாக வினைப் பயன்கள் (கர்மம்) ஏற்படாது தடுக்கவும் செய்யும். முற்றிலும் தூய்மையான ஆத்மா அல்லது ஜீவன் அர்ஹாத் என்னும் நிலையை அடைந்து பிறவியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் என்பதே மகாவீரரின் கொள்கை.
வினைப் பயனிலிருந்து விடுபடுவதே சமண சமயத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு மூன்று ரத்தினங்கள் என்னும் மூன்று கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவைவே அவை.
மூன்று ரத்தினங்கள் :
நல்ல நம்பிக்கை என்பது மகாவீரர் மீட்பை அல்லது மோட்சத்தை அடைவதற்கான வழியைக் காட்டியவர் என்று நம்புவதாகும். இந்த உலகை யாரும் படைக்கவில்லை, இயற்கையாகத் தோன்றியது என்று புரிந்து கொள்வதே நல்ல அறிவாகும்.
நல்ல செயலில் ஐந்து ஒழுக்கங்கள் அடங்கியிருக்கின்றன. அவை உயிரினங்களைக் கொல்லாமை, பொய் பேசாமை, திருடாமை, சொத்து சேர்க்காமை, கற்புடமை ஆகிய ஐந்து பண்புகளாகும். இவை மீட்புப் பயனிலிருந்து மீட்பு பெறுவதற்கு துணை நிற்கின்றன.
உயர்ந்த குணங்களே கடவுள் :
கடவுள் உலகை படைத்தார் என்ற கருத்தில் மகாவீரருக்கு நம்பிக்கையில்லை. உலகம் இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கடவுள் என்ற ஒன்று இல்லை என்பது இவரது கருத்தாகும். மனிதனிடத்தில மறைந்து கிடக்கும் உயர்ந்த குணங்களும் நற்பண்புகளே கடவுள் என்ற தன்மைகளாகும்.
உலக வரலாற்றில் தீவிர அகிம்சைக் கொள்கையை மகாவீரர் போதித்தார். தாவரங்கள், உலோகங்கள், தண்ணீர் ஆகியவையும், பறவைகளையும், மிருகங்களையும் போல உயிருள்ளவைகளாகக் கற்பித்து துன்புறுத்தாமல் இருக்கும் கொள்கைக்கு அதிக ஆதரவு அளித்தார். காற்றிலுள்ள கண்ணுக்கு தெரியாத அணுக்கள் சுவாசிக்கும்போது மூக்கின் வழியாகச் சென்று இறந்துவிடக் கூடுமென கருதி மூக்கில் மெல்லிய துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
பாவம் செய்தால் மறுபிறவி ஏற்படுகிறது. துன்பங்களும் பின்தொடர்கின்றன. எண்ணங்களாலும், செயல்களாலும், பாவங்களைச் செய்தால் மறுபிறப்பில் கீழ்த்தர உயிர்களாக பிறந்து துன்பங்களை அடைய நேரிடும். எனவே மோட்சத்தை அடைய துறவறம் பூண்டு, உடலை வருத்தி தவம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கர்மம் நீங்கி மறுபிறப்பில் மீட்பைப் பெற்று இன்ப நிலையை அடையலாம்.
வேதங்களிலும், வேள்விகளிலும் மகாவீரர் நம்பிக்கை கொள்வதில்லை, பிராமணர்களின் மேலாண்மையை மறுத்தார். இவர் ஏற்கனவே நிலவிய சமண மதத்திற்கு ஊக்கம் அளித்தார்.
சமண சமயத்தை பின்பற்றியவர்கள் :
மகாவீரரின் பரிசுத்த நிர்வாணம் என்ற கொள்கையால் உடலில் ஆடை அணிவதை நீக்கினர். எனவே சமண மதத்தில் இரு பிரிவுகள் பிற்காலத்தில் உருவாயின. மகாவீரர் நெறியைப் பின்பற்றி நிர்வாண முறையைத் தொடர்ந்தவர்கள் திகம்பரர்கள் என்றும், வெள்ளை ஆடை அணிந்தவர்கள் சுவேதாம்பரர்கள் என்றும் இரு பிரிவுகள் சமண இருந்தன. மகாவீரருக்கு பதினொன்று சீடர்கள். மகாவீரரது மறைவிற்குப் பின்னர் இவரது சீடர்களில் ஒருவரான சுதர்மன் என்பவர் சமணப் பள்ளிகளுக்குத் தலைமை வகித்தார்.
கி.மு. 300ல் நடைபெற்ற சமண மாநாட்டில் சமணக் கொள்கையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. இதன் விளைவாக "ஸ்தூலபத்ரா" என்பவரின் தலைமையின் கீழ் இருந்தவர்களுக்கும் பத்திரபாகு என்பவரின் தலைமையின் கீழ் இருந்தவர்களுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டது.
வடநாடு திரும்பிய பத்ரபாகுவின் சீடர்கள் சுவேதம்பரர் (வெள்ளை ஆடை அணிவோர்) என்று அழைக்கப்பட்டனர். குருவின் ஆணைகளை அப்படியே கடைபிடித்து ஆடையுட்பட புறப் பொருட்கள் யாவற்றையும் துறந்து நின்ற சமணர்களுக்கு திகம்பரர் (நிர்வாண சமணர் - ஆகாயத்தை உடையாகக் கொண்டவர்கள்) என்றும் அழைக்கப்பட்டனர் என்று அறியப்படுகிறது.