தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இயற்கை பேரழிவு தொடருமா?
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் : சனி கிரகம் கேதுவின் நட்சத்திரமான மிதுன நட்சத்திரத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். மிதுன நட்சத்திரத்தில் சனி இருக்கும் வரை உலகெங்கும் இயற்கை சீரழிவுகள் பெருகும்.
மிதுன நட்சத்திரத்தில் நவம்பர் வரை சனி இருக்கப் போவதால் இயற்கை சீரழிவுகள் அதிகமாகவே இருக்கும். 2008 ஆம் ஆண்டு முடிவு வரை இயற்கையால் ஏற்படும் நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகள் தொடரும்.
இந்த சனிப் பெயர்ச்சியினால் நிலநடுக்கமும், நிலச்சரிவுகளும் அதிகமாகும் என்று இந்த ஆண்டிற்காக அளித்த பலனிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
சூரியனை அடிப்படையாகக் கொண்ட பருவ நிலை மாற்றமே, சூரியன் வீட்டில் சனி நுழைந்திருப்பதால் உலகெங்கும் பருவ நிலை மாறுவதற்கு காரணமாகும். மழை என்றால் கனத்த மழை, வெயில் என்றால் கடும் வெயில். எதுவானாலும் இந்தக் காலகட்டத்தில் கடுமையாக இருக்கும். காடுகள், மலைகள் அழியும்.
கேள்வி : தொழிற்சாலைகளில் இருந்தும், வாகனங்களில் இருந்தும் வெளியேறும் நச்சுப் பொகையினால், குறிப்பாக கரியமில வாயு வெளியேற்றத்தால் புவி வெப்பமடைகிறது என்றும், அதுவே தற்பொழுது ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்களுக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது எப்படி மாறும்?
வித்யாதரன் : சிம்ம ராசியை விட்டு கன்னி ராசிக்கு சனி பெயரும் போது இயற்கை சீரமைப்பிற்கும் வழிகளெல்லாம் பிறக்கும். இயற்கை ரீதியாகவே அந்த சீரமைப்புகள் நடந்தேறும்.
இந்தியாவைப் பொறுத்தவரையும் இயற்கை சீரழிவு ஆபத்து இருக்கிறது. பூமிக்காரன் என்றழைக்கப்படும் செவ்வாய், புதன் வீட்டிலேயே (மிதுனம்) இருப்பதால் ஏப்ரல் 30, 2008 வரை வக்கிரமாகி இருக்கப் பெறுதலால் நிலநடுக்கம், தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகரிக்கும். புதிய தீவிரவாத அமைப்புகள் உருவாகும். மின் கசிவுகளால் தீ விபத்துகள் ஏற்படுவது அதிகரிக்கும்.
இந்தியாவிற்குள் மராட்டியம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
மராட்டியத்தில் நிலநடுக்க ஆபத்தும், மராட்டிய மாநில அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அருணாச்சலப் பிரதேசத்தில் தீவிரவாதம் அதிகமாகி பிளவு ஏற்படும் ஆபத்து உள்ளது.
நாளை (18.08.2007) முதல் 19.09.2007க்குள் அரசியல் மாற்றங்கள், இயற்கை சீரழிவுகள், சாலை, விமான விபத்துக்கள் அதிகரிக்கும்.
கேள்வி : இப்படிப்பட்ட நிலைமைகளில் பொதுவாக எப்படிப்பட்ட மனப்பாங்குடன் செயல்பட வேண்டும்.
வித்யாதரன் : சனி சாத்வீக கிரகம். அதே நேரத்தில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று கூறுவார்கள். அதனை சீண்டிப் பார்த்தால் சும்மா இருக்காது. குறைகள், விமர்சனங்கள் கூறப்பட்டால் கேட்டுக் கொள்வது நல்லது. அனைவரும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும்.