Article Olympic Achievers %e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d %e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d 108071800018_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாப் பீமோன்

ஒரே தாண்டலில் உலக சாதனை!

Advertiesment
பாப் பீமோன்
நீண்டகாலம் நீடித்த உலக சாதனை ஒன்றை உருவாக்கிய தனிப்பெருமை பெற்றவர் அமெரிக்க வீரரான பாப் பீமோன்.

1968 ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் நடந்த ஒலிம்பி‌க் போட்டியில், நீளம் தாண்டுதலில் 8.90 மீட்டர் தூரத்தை தாண்டி பாப் பீமோன் உருவாக்கிய ஒலிம்பிக் / உலக சாதனையை முறியடிக்க 23 ஆண்டுகள் ஆனது!

1968 ஆம் ஆண்டு நடைபெற்ற 23 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற பாப் பீமோன், 22 போட்டிகளில் வெற்றி பெற்று இவர்தான் ஒலிம்பிக்கில் தங்கத்தை வெல்லப் போகிறவர் என்கின்ற முத்திரையுடன் மெக்ஸிகோ வந்தார்.

மெக்ஸிகோவில் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி நடந்த தகுதிபெறும் போட்டியில் தனக்கு அளிக்கப்பட்ட மூன்று வாய்ப்புக்களில் இரண்டு வாய்ப்புகளை கோட்டின் மீது காலை வைத்து தாண்டியதால் தவறவிட்ட பாப் பீமோனிற்கு அவருடைய சக நாட்டு வீரர் ரால்ஃப் பாஸ்டன் அறிவுரை கூறி காப்பாற்றினார்.

கோட்டிற்கு அருகே காலை பதித்து தாண்டாமல், சில செ.மீட்டர்கள் முன்னால் கால் பதித்து பாதுகாப்பாக தாண்டுமாறு ரால்ஃப் கூறிய அறிவுரையின்படி தனது மூன்றாவது வாய்ப்பில் சுலபமாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் பீமோன்.

மறுநாள் அக்டோபர் 18 ஆம் தேதி நடந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தனது முதல் தாண்டுதலிலேயே பாப் பீமோன் தாண்டிய தூரம் 8.90 மீட்டர் என்று அறிவிக்கப்பட்டபோது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டுத் தெரிவித்தனர். பாப் பீமோனிற்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்கு மீட்டர் அளவைப் பற்றி தெரியாததால் தான் தாண்டிய தூரத்தை அடிகளில் சொல்லும் வரை காத்திருந்தார்.

பீமோன் தாண்டிய தூரம் 29 அடி இரண்டரை அங்குலம் தூரம் தாண்டினார் என்று அறிவிப்பு வந்தவுடன் துள்ளி குதித்து உணர்ச்சிவயப்பட்டு மயக்கமுற்றார்.

எந்தவொரு வீரருக்கும் மயக்கம் ஏற்படத்தான் செய்யும். ஏனெனில், ஏற்கனவே இருந்த சாதனையைவிட ஒரு செ.மீ. தூரம் தாண்டினாலே உலக சாதனைதான். ஆனால், பாப் பீமோன் ஒரே தாண்டலில் ஏற்கனவே இருந்த உலக சாதனையைவிட 55 செ.மீ. அதிகம் தாண்டினார்.

அதுவரை 8.35 மீட்டர்தான் சாதனையாக இருந்தது. அதாவது 27 அடி நான்கேமுக்கல் அங்குலம். இந்த உலக சாதனை 33 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக 22 செ.மீட்டர்கள்தான் உயர்ந்து இந்த நிலையை அடைந்தது.

ஆனால் பாப் பீமோன் ஒரே தாண்டலில் 55 செ.மீட்டர்கள் அதாவது சற்றேறக்குறைய ஒன்றே முக்கால் அடி அதிகம் தாண்டி உலக சாதனைப் படைத்தார்.

அவருடைய இந்த சாதனை ஆங்கில அகராதியில் ஒரு புதிய வார்த்தையையே சேர்க்க காரணமானது. விளையாட்டில் எவராவது எதிர்பாராத அளவிற்கு பெரும் சாதனை புரிந்தால் அதனை Beamonesque என்று வார்த்தையாக வர்ணிக்கப்பட்டது.

1968 பாப் பீமோன் உருவாக்கிய உலக சாதனையை 1991 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன் போட்டிகளில் அமெரிக்காவின் மைக் பாவல் உடைத்தார். 8.95 மீட்டர் தூரம் தாண்டி மைக் பாவல் உலக சாதனை நிகழ்த்தினார். ஆயினும், ஒலிம்பிக்கை பொருத்தவரை பாப் பீமோனின் சாதனை இன்னமும் முறியடிக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil