Article Olympic Achievers %e0%ae%9c%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d %e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf 108071800031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜான் செலஸ்னி

ஈட்டி எறிதலில் தொடர் உலக சாதனையாளர்!

Advertiesment
ஜான் செலஸ்னி
உக்ரைனின் செர்கி பூப்காவைப் போல களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் புதிய சாதனையை நிகழ்த்தி தனக்குத்தானே போட்டியாளராகவும், புதிய இலக்கை நிர்ணயித்து அதனைக் குறிவைத்து கடந்து புதிய சாதனைகளை நிகழ்த்திய அற்புதமான தடகள வீரர் ஜான் செலஸ்னி ஆவார்!

webdunia photoWD
செக் குடியரசை சேர்ந்த இந்த வீரர், அந்நாட்டின் மிலாடா ஓலெஸ்லாவ் எனும் நகரில் ஜூன் 16, 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.

1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தனது நாட்டிற்காக களமிறங்கிய ஜான் செலஸ்னி, அப்பொழுதே உலக சாதனையைப் படைத்த வீரராக திகழ்ந்தார்.

ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிச் சுற்றிலேயே அன்றைய உலக சாதனை தூரத்தைக் கடந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இவர்தான் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இறுதிப் போட்டியில் கடைசிச் சுற்றில் கடைசியாக வந்து எறிந்த ஃபின்லாந்து வீரர் டாப்பியோ கார்ஜஸ், செலஸ்னியை விட 16 செ.மீ. அதிகம் வீசி தங்கத்தை வென்றார்.

தங்கத்தை வெல்வோம் என்கின்ற எதிர்பார்ப்புடன் வந்த செலஸ்னி, வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று. அது அவருடைய மனோநிலையை பாதித்தது போல் தெரிகிறது.

அதன்பிறகு கலந்துகொண்ட சர்வதேசப் போட்டியில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை செலஸ்னி.

ஆனாலும், 1992 ஆண்டு நடந்த பார்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் இறுதிக்குத் தகுதிபெற்ற செலஸ்னி, முதல் எறிதலிலேயே, சியோலில் தான் நிகழ்த்திய ஒலிம்பிக் சாதனையை விட 3.76 மீட்டர் அதிகமாக வீசி புதிய ஒலிம்பிக் சாதனைப் படைத்து தங்கத்தை வென்றார்.

அதன் பிறகு நடந்த சர்வதேச தடகளப் போட்டிகள் அனைத்திலும் 90 மீட்டருக்கு அதிகமாக தொடர்ந்து வீசி சீரான, சிறந்த தடகள வீரராக தொடர்ந்து முன்னணியில் இருந்தார்.

கடுமையான பயிற்சியினால் குறைந்த எடையுடன் தனது உடலை தகுதிமிக்கதாக வைத்திருந்த செலஸ்னி, 1996 ஆம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் தங்கத்தை வென்றார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த உலகத் தடகளப் போட்டிகளில் 1993-லும், 1995-லும் தங்கம் வென்றார் செலஸ்னி.

2000 ஆவது ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது முறையாக பங்கேற்ற செலஸ்னி, பிரிட்டிஷ் வீரர் ஸ்டீவ் பேக்லியை மீண்டும் வென்று தங்கத்தை வென்றார். அவர் வீசிய ஈட்டி 90.17 மீட்டர் தூரம் தாண்டிச் சென்று நிலத்தில் குத்தி நின்றது. அதுவே இப்போதைய ஒலிம்பிக் சாதனையாகும்.

ஒலிம்பிக் சரித்திரத்தில் 3 ஒலிம்பிக் போட்களில் தொடர்ந்து தங்கம் வென்ற சாதனையாளராகத் திகழ்ந்த ஒரே ஒரு வீரர் என்கின்ற பெருமைப் பெற்றார் செலஸ்னி.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றார்.

1996 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நடந்த சர்வதேச தடகளப் போட்டி ஒன்றில் ஜான் செலஸ்னி 98.48 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அதுவே உலக சாதனையாக உள்ளது.

1991 ஆம் ஆண்டில் மட்டும் நடந்த பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் 89 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக 21 முறை எறிந்து சாதனைப் படைத்த மாபெரும் வீரராகத் திகழ்ந்தார் ஜான் செலஸ்னி.

பதக்கங்களும், புகழும் செலஸ்னியை எந்தவிதத்திலும் திருப்தியடையச் செய்யவில்லை. சாதனைகளை இலக்காகக் கொண்டு தனது திறமையை எந்த அளவிற்கு உயர்த்த முடியுமோ அதனை ஒவ்வொரு போட்டியிலும் செய்து ஒலிம்பிக் உணர்வை முழுமையாக பிரதிபலிப்பவராகத் திகழ்கிறார் ஜான் செலஸ்னி.

Share this Story:

Follow Webdunia tamil