ஜஸ்ஸி ஓவன்ஸ்
நாஜி கருத்தை தவிடுபொடியாக்கிய கறுப்பு வைரம்!
பாரம்பரிய ரீதியிலும், புத்தி ரீதியிலும் ஆரியர்களே பலமானவர்கள், திறமையானவர்கள் என்று ஹிட்லரின் நாஜி முட்டாள்கள் பரப்பிய கருத்தை தனது அபாரத் திறனால் உடைத்தெறிந்து தகர்த்தவர் ஜெஸ்ஸி ஓவன்ஸ்.
1936 ஆம் ஆண்டு ஹிட்லரின் எதேச்சதிகாரத்திற்கு ஆட்பட்டிருந்த ஜெர்மனியின் தலைநகர் பெர்லினின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கங்களை வென்று அப்பழுக்கற்ற திறனிற்கு சான்றாக உயர்ந்தார் ஜேம்ஸ் க்ளீவ்லாண்ட் ஓவன்ஸ் என்கின்ற ஜெஸ்ஸி ஓவன்ஸ்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரே அவர் ஒரு உலக சாதனையாளர் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.
விவசாயக் கூலி ஒருவரின் மகனாகப் பிறந்து கடும் உழைப்பால் ஆர்வத்துடன் முன்னேறிய ஜெஸ்ஸி ஓவன்ஸ், 1935 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த தேர்வுப் போட்டிகளில் 45 நிமிடங்களில் 5 உலக சாதனைகளை ஏற்படுத்தினார் என்று கூறினால் நம்ப முடிகிறதா?
ஆம், 3.15 மணிக்கு மிர்ச்சிகன் நகரில் உள்ள ஆன் ஆர்பர் என்ற இடத்தில் உள்ள ஆட்டக்களத்தில் நடந்த 10 கெஜ ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.4 நொடிகளில் கடந்து முதல் உலக சாதனையை ஏற்படுத்திய ஜெஸ்ஸி ஓவன்ஸ், அடுத்து நடைபெற்ற நீளம் தாண்டுதலில் 8.13 மீட்டர் தூரம் தாண்டினார். இந்த உலக சாதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமல் நிலை நின்றது.
அடுத்ததாக நடந்த 220 கெஜ ஓட்டப் பந்தயத்தில் 20.3 நொடிகளில் கடந்து உலக சாதனையும், 220 கெஜ தடையோட்டத்தில் 22.6 நொடிகளில் மற்றொரு உலக சாதனையையும் ஏற்படுத்தினார். பிறகு நடைபெற்ற தொடர் ஓட்டப் பந்தயத்தில் மேலும் ஒரு உலக சாதனை நிகழ்த்தினார் ஜெஸ்ஸி ஓவன்ஸ் என்று சரித்திரம் கூறுகிறது.
ஓராண்டிற்குப் பிறகு பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் ஓவன்ஸ் களமிறங்கிய போது சகநாட்டு வீரரான ரால்ஃப் மெட்கால்ஃபி அவருக்கு சரியான போட்டியாகத் திகழ்ந்தார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றிலேயே ஒலிம்பிக் சாதனையை சமன் செய்த ஓவன்ஸ், இறுதி ஓட்டத்தில் ஒரு மீட்டர் வித்தியாசத்தில் ரால்ஃப்பை தோற்கடித்து முதல் தங்கத்தை வென்றார்.
அடுத்த நாள் நடந்த நீளம் தாண்டுதலில் அளிக்கப்படும் 3 வாய்ப்புகளில் 2 வாய்ப்புகளை கோட்டின் மீது கால்வைத்து தாண்டியதற்காக அவருடைய தாண்டல் நிராகரிக்கப்பட்டது. அப்பொழுது அவர் அருகே வந்த ஜெர்மன் நாட்டின் நீளம் தாண்டுதல் வீரரான லஸ் லாங், கோட்டிற்கு அரை அடி முன்னதாகவே கால் பதித்து தாண்டுமாறு ஓவனிற்கு அறிவுரை கூற அதன்படி ஓவன்ஸ் 3வது தாண்டலில் சிறப்பாகத் தாண்டி தங்கத்தை வென்றார்.
கறுப்பர்களை விலங்குகள் என்று வெறுத்து ஒதுக்கும் நாஜிக்கள் ஆண்ட ஜெர்மனி நாட்டின் சார்பாக பங்கேற்ற லஸ் லாங், அந்த கண்ணோட்டத்தையெல்லாம் தாண்டி ஒரு விளையாட்டு வீரனுக்கு உரிய உயரிய உளப்பாங்குடன் தனது சக போட்டியாளருக்கு அளித்த அறிவுரை இன்று வரை உலகத்தவரால் பேசப்படுகிறது.
ஓவன்ஸ் தங்கம் வென்றதும் நேராக ஓடிச்சென்று லஸ் லாங்கை கட்டியணைத்துக் கொண்டார். லஸ் லாங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தக் காட்சியை சகிக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அடால்ஃப் ஹிட்லர் என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், லஸ் லாங்குடன் ஓவன்ஸிற்கு ஏற்பட்ட நட்பு 1943 ஆம் ஆண்டு போரின்போது லஸ் லாங் கொல்லப்படும் வரை நீடித்தது.
நீளம் தாண்டுதலில் மறுநாளே நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 4 மீட்டர் வித்தியாசத்தில் வென்று தனது 3வது தங்கத்தை வென்றார் ஜெஸ்ஸி ஓவன்ஸ்.
3 நாட்களுக்குப் பிறகு நடந்த 4 ஓ 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிகட்டத்தில் பேட்டனைப் பெற்றுக்கொண்டு ஓடி, அமெரிக்கா புதிய உலக சாதனை படைக்க உதவினார். அந்த சாதனை அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீடித்தது.
7 நாட்களில் 4 தங்கங்களை வென்று ஜெஸ்ஸி ஓவன்ஸ் உலகப் புகழ்பெற்றது நாஜிக்களின் இன உயர்வு கருத்தை தரைமட்டமாக்கியது. ஜெர்மானிய மக்கள் நாஜிக்களின் தடையையும் தாண்டி ஜெஸ்ஸி ஓவன்ஸை நாயகனாகப் போற்றினார்கள்.
வெற்றி வீரராக உலகப் புகழ் பெற்றவராக அமெரிக்கா திரும்பிய அந்த கறுப்பு இன வீரருக்கு அந்நாட்டிலும் மேல்பூச்சாக பாராட்டுக்கள் நடத்தப்பட்டாலும், அமெரிக்க நிர்வாகம் நாஜிக்களைப் போலவே ஜெஸ்ஸி ஓவனிற்கு மரியாதை தர மறுத்துவிட்டது. அமெரிக்காவின் அதிபராக இருந்த ஃபிராங் ரூஸ்வெல்ட் வெள்ளை மாளிகைக்கு ஜெஸ்ஸி ஓவனை அழைத்து விருந்து வைத்து கௌரவிக்க மறுத்துவிட்டார்.
எல்லாவற்றையும் புரிந்துகொண்ட ஜெஸ்ஸி ஓவன்ஸ், அமெரிக்காவை ஆளும் வெள்ளையர்களுக்கும், ஹிட்லரின் நாஜிக்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறினார்.
அரசுகளின் பாராமுகம் இந்த மாவீரன் சாதனைப் புகழை மறைத்துவிடவில்லை. மார்பு புற்றுநோய் காரணமாக 1980 ஆம் ஆண்டு ஜெஸ்ஸி இறந்தபோது, அவரைப் பற்றி படத்துடன் எழுதி புகழுரை சூட்டாத பத்திரிக்கை என்று உலகத்தில் எதுவும் இல்லை என்ற நிலை இருந்தது. இன்றும் நினைவில் வாழும் மகா வீரர்.