சென்னை மத்திய சிறைச்சாலை இடிக்கும் பணி தொடங்கும்வரை தினமும் பொதுமக்கள் பார்வையிடாலம் என்று சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். மேலும் காலை முதல் மாலை வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் உள்ள 172 ஆண்டுகள் பழமையான மத்திய சிறைச்சாலையை பொதுமக்கள் பார்க்க நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் சிறைச்சாலைக்கு வந்தனர்.
இதனால் கூட்டம் அதிகமானது. பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கும் நிலை உருவானது. இதனால் சிறைத்துறை அதிகாரி நடராஜ், காவல்துறையினரை உடனடியாக வரவழைத்து உரிய பாதுகாப்பு செய்து மக்களை சீராக செல்ல ஏற்பாடு செய்தார்.
மேலும் சிறைச்சாலையைப் பார்ப்பதற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறைச்சாலையை இடிக்கும் பணி துவங்கும் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளார் நட்ராஜ்.
இது குறித்து அவர் பேசுகையில், சிறைச்சாலையை பார்ப்பதற்கு சென்னை நகர மக்கள் அனைவரும் ஆர்வமாக இருப்பதால் சிறைச்சாலை கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கும்வரை தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும், மக்கள் பொறுமையாகவும், நெரிசல் இல்லாமலும் சிறைச்சாலையை பார்த்து செல்லலாம் என்றும் டி.ஜி.பி. நடராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.