சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய மத்திய சிறைச்சாலை இடிக்கும் பணிகள் துவங்கிவிட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருந்த 172 ஆண்டுகள் பழமையான மத்திய சிறைச்சாலை கட்டிடம் இடிக்கப்படுகிறது. இடிக்கும் பணி நேற்று தொடங்கியபோது சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரிகளும், ஊழியர்களும் கவலையோடு பார்த்தனர்.
இந்தியாவில் பிரிட்டீஷ்காரர்களின் ஆட்சி நடந்த போது 1837-ம் ஆண்டு இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது. இந்த சிறைச்சாலைக் கட்டடம் மிகவும் பழுதாகிவிட்டதாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பற்று இருந்ததாலும், சென்னையை அடுத்த புழலில் புதிய மத்திய சிறைச்சாலை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
எனவே, பழைய மத்திய சிறைச்சாலையை இடித்துவிட்டு, அந்த இடத்தில் அரசு பொது மருத்துவமனையின் புறநோயாளிகள் பகுதியை கட்டவும், மின்சார வாரியத்தின் துணை மின்நிலையம் கட்டவும், மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒரு பகுதியை ஒதுக்கவும் அரசு முடிவு செய்தது.
அதன்படி, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடிக்கும் பணிகள் நேற்று துவங்கின.
முன்னதாக அந்த சிறைச்சாலையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளான சிறைத்துறை தலைமை இயக்குனர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ், . சிறைத்துறை டி.ஐ.ஜி. துரைசாமி, புழல் சிறைச்சாலை சூப்பிரண்டு ராஜேந்திரன், மற்றும் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சிறைச்சாலை ஊழியர் ஆண்ட்ரூஸ், அரசு சிறப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் உள்ளிட்டோர் சிறைச்சாலையைப் பார்வையிட்டனர்.
அப்போது அந்த சிறைச்சாலை பற்றிய ருசிகர விஷயங்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
அதன் பின்னர் சிறைத்துறை தலைமை இயக்குனர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் பேசுகையில், 1837-ம் ஆண்டு 9 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஜெயில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் சீர்திருத்தப்பள்ளியாக இந்த ஜெயிலை வெள்ளைக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர். அந்தமான் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்படும் கைதிகள் கப்பல் வரும்வரை இந்த ஜெயிலில் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளனர். 1855-ம் ஆண்டிலிருந்து தான் இந்த ஜெயில் மத்திய ஜெயில் அந்தஸ்தை பெற்றுள்ளது. சுமார் 2,500 கைதிகள் அடைக்கப்படும் வசதிகள் இங்குள்ளது.
இந்த சிறைச்சாலையில் சுதந்திர போராட்ட வீரர் வீரசவார்க்கர் முதல் அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அமெரிக்க கடத்தல் மன்னர்களான வால்காட், டோன்சே போன்ற பயங்கரமானவர்களும் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தப்பியும் சென்றுள்ளனர். ஆட்டோ சங்கரும் இந்த சிறைச்சாலையில் இருந்து தப்பி உள்ளான். இங்கிருந்து 8 விடுதலைப்புலிகளும் தப்பி சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
இங்குள்ள தலைவர்கள் அடைக்கப்படும் அறையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பழம்பெரும் நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், எம்.ஆர்.ராதா போன்றோரும் இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இங்கிருந்துள்ளார்.
இந்த சிறைச்சாலை இருந்த தூக்குமேடை 1970-ம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள தூக்குமேடையில் 10 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
சென்னையின் சின்னமாகவும், திரைப்படங்களில் சிறைச்சாலை என்றாலே காட்சிக்கு வருவதுமான மத்திய சிறைச்சாலை இன்னும் சில நாட்களில் கண்ணை விட்டு மறைந்துவிட உள்ளது. கண்ணை விட்டு மறைந்தாலும் நமது மனக்கண்களில் இருந்து அகல வாய்ப்பே இல்லை.
என்ன ஒரு மனக்குறை என்றால், நமது சந்ததிகளுக்கு இப்படி ஒரு சிறைச்சாலை இருந்தது என்று நாம் கூறத்தான் முடியுமே தவிர காட்ட முடியாது....
இடிப்பதற்கு முன்பு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.