Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரண்பட்ட உறவு!

Advertiesment
முரண்பட்ட உறவு!
, சனி, 14 ஜூன் 2008 (14:35 IST)
இலக்கிய மேதை பிரான்ஸ் காஃப்கா தந்தைக்கு எழுதிய கடிதம்!

[முன்னுரை: தந்தை என்பவர் ஒரு நபர் அல்ல. அந்த வார்த்தை பலவற்றை குறிக்கும் ஒரு குறியீடு. அன்பு, பாசம், ஆதிக்கம், கண்டிப்பு, பாதுகாப்பு, அறிவுரை, தண்டனை என்ற முரண்பட்ட பலவற்றின் ஒருங்கிணைந்த குறியீடாகவும், இன்னமும் விரிவு படுத்தினால், அறிவு, சிந்தனை, மேலும் விரித்துக் கூறினால் சமூகம், பண்பாடு, மதம், நாடு என்று இதன் அர்த்த தளங்களை நாம் விரித்துக் கொண்டே செல்லலாம். இன்னும் கூறவேண்டுமென்றால் படைப்பவர். இந்து புராணிக மரபில் பிரம்மா, அதாவது படப்போன்.

இப்படி தத்துவ, இறையியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் அதன் அர்த்த தளங்கள் விரிவு படுத்தப்படலாம். கண்டிப்பான தந்தையிடமும், தண்டிக்கும் தந்தையிடமும் வளர்பவர்கள் நட்பு ரீதியான மற்றொரு நபரை தங்களின் பதிலித் தந்தையாக தேடுவர், தந்தையை எதிர்த்து சித்தம் போக்கு சிவம் போக்கு என்று வளரும் நபர்கள், ஒரு குறிப்பிட்ட வயதில் குற்ற உணர்வினால் வேறு ஒரு கண்டிப்பான நபரை, உதாரணமாக ஒரு அரசியல் தலைவரையோ, மதத் தலைவரையோ, அல்லது ஏதாவது சாமியாரையோ, இழந்த கண்டிப்பை தன் மனதிற்குள் மீண்டும் நுழைத்துக் கொள்ள, தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள, தேடிச்செல்வார்கள். இப்போது தந்தை என்ற சொல் "ஒழுங்கு" என்ற ஒரு புதிய அர்த்த தளத்தை எட்டுகிறது.

webdunia photoWD
மேற்கூறிய வகைப்பாட்டில் கண்டிப்பான தனது தந்தையை புகழ்வது போல் பழித்தும், பழிப்பது போல் புகழ்ந்தும் ஜெர்மானிய இலக்கிய மேதை பிரான்ஸ் காஃப்கா தன் தந்தைக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சில பகுதிகளை தமிழில் தருகிறோம்]

அன்புள்ள அப்பா,

நீங்கள் சமீபத்தில் கேட்டிருந்தீர்கள், நான் ஏன் உங்களைக் கண்டு பயப்படுபவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று. எப்போதும் போலவே என்னால் இதற்கான விடையை யோசிக்கமுடியவில்லை. ஏனெனில் உங்களிடம் உள்ள பயமே கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் நான் பேசும்போது தோராயமாக நினைவில் வைத்திருந்த அனைத்தை விடவும், இந்த பயத்திற்கான காரணங்களின் அடிப்படைகளை விளக்கும்போது விவரங்களின் ஆழங்களுக்கு செல்ல நேரிடலாம். இப்போழுது நான் உங்களுக்கு எழுத்தில் பதில் அளித்தாலும் இதுவும் ஒரு நிறைவை அடையாது போகும். ஏனெனில் எழுதும்போது கூட பயமும் அதன் விளைவுகளும் உங்களுடனான உறவை தடுக்கும். மேலும் இந்தப் பிரச்சனையின் பரிமாணம் என்னுடைய ஞாபகம், தர்க்க எல்லைகளையும் கடந்ததாய் உள்ளது.

குறைந்தது என்னிடம் நீங்கள் என் முன்னிலையிலும் பாகுபாடின்றி எல்லோர் முன்னிலையிலும் பேசியதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு விஷயங்கள் அனைத்தும் சுலபமாக உள்ளது. நீங்கள் எதுபோன்று பேசுவீர்கள் என்றால்..

அது இப்படித்தான் இருக்கும்: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடுமையாக உழைத்தீர்கள், குழந்தைகளுக்காக தியாகங்கள் பல செய்துள்ளீர்கள், அனைவருக்கும் மேலாக எனக்காக அதிகம் தியாகம் செய்துள்ளீர்கள் அதன் விளைவாக நான் உயரிய, அழகான வாழ்வை வாழ்ந்தேன், நான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றேன், பொருளாதாரக் கவலைகள் இன்றி சுகமாக வாழ்ந்தேன், அதாவது கவலைகள் என்றால் எந்த ஒரு கவலையுமின்றி... இதற்காக நீங்கள் எந்த விதமான நன்றியையும் எதிர்பார்க்கவில்லை, "குழந்தைகள் நன்றி" எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்துள்ளீர்கள், ஆனால் ஒரு சிறிய பணிவிரக்கம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், அதாவது ஒரு விதமான கருணையை எதிர்பார்க்கிறீர்கள்.

மாறாக நான் உங்களிடமிருந்து மறைந்தே இருந்திருக்கிறேன், என்னுடைய அறைக்குள், என்னுடைய புத்த்கங்களுக்குள், பைத்தியக்கார நண்பர்களுக்குள் அல்லது கிறுக்குத் தனமான கருத்துகளுக்குள். நான் உங்களிடம் வெளிப்படையாக பேசியதில்லை, நீங்கள் வழிபாட்டுத் தலத்தில் இருந்த போது நான் உங்களை வந்து பார்க்கவில்லை அல்லது எந்த ஒரு குடும்ப உணர்வையும் கொண்டிருக்கவில்லை; நான் உங்கள் தொழில் நலத்திலோ அல்லது உங்களது பிற நலத்திலோ அக்கறை காட்டவில்லை. தொழிற்சாலைக்கு உங்களை சுமந்து சென்று பிறகு நான் பாட்டுக்கு சென்று விட்டேன். ஓட்லா பிடிவாதம் பிடித்தபோது அவளை ஊக்குவித்தேன்.

webdunia
webdunia photoWD
உங்களுக்காக என் விரலைக் கூட நான் தூக்கியதில்லை (ஒரு தியேட்டர் டிக்கெட் கூட வாங்கித் தரவில்லை), ஆனால் நான் என் நண்பர்களுக்காக அனைத்தையும் செய்தேன். என்னைப் பற்றிய உங்கள் தீர்ப்பை தொகுத்து நீங்கள் கூறினால், அதாவது நீங்கள் என்னைப்பற்றி ஒட்டுமொத்தமாக முறை கேடானவன் என்றோ, தீமையானவன் (அதாவது எனது சமீபத்திய திருமணத் திட்டம் நீங்கலாக) என்றோ கூறமாட்டீர்கள், ஆனால் அலட்சியம், அன்னியமாக இருத்தல், நன்றிகெட்டத் தனம் என்று நீங்கள் கூறலாம். மேலும் என்னவேண்டும், இவ்வாறு நீங்கள் என்னைப்பற்றி கூறும் விதம் நான்தான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமான காரணம் என்பது போல் இருக்கும், ஏதோ ஒரு சக்கரத்தைத் தொட்டு திருப்புவது போல் என்னால் அனைத்தையும் வித்தியாசமாக செய்திருக்க முடியும் என்றும், எனக்கு ஒன்று நன்மையாக முடிந்திருந்தாலே தவிர, உங்களைக் கொஞ்சம் கூட குற்றம் கூற முடியாது., இவ்வாறுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

இப்படித்தான் நீங்கள் வழக்கமாக இதைக் கூறுவீர்கள். நமக்குள் இருக்கும் இடைவெளியைப் பொறுத்தவரை உங்களது இந்த கூற்றுகளை நான் ஏற்கவேண்டுமெனில் நீங்கள் முழுதும் குற்றமற்றவர் என்று நான் முழுதும் நம்பவேண்டும். ஆனால் நானும் உங்களைப்போலவே முழுதும் குற்றமற்றவன்தான். இதனை நான் உங்களை ஒப்புக் கொள்ள வைக்கவேண்டுமெனில்... நான் நினைக்கிறேன்... ஒரு புது வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில்லை- நாம் இருவருமே அதற்கான வயதை கடந்து விட்டவர்கள்-ஆனால் ஒரு வகையான அமைதியான உறவு சாத்தியம். முற்றிலும் தவிர்த்தல் அல்ல. ஆனாலும் உங்களது நிறுத்த முடியாத வசைகளை குறைக்கலாம்...

எனக்கு சரியாக நினைவில் இருக்கும் ஒரு சம்பவம், உங்களுக்கும் கூட அது நினைவிருக்கலாம். ஒரு நாள் இரவு நான் தாகம் எடுத்து தண்ணீருக்காக தேம்பி அழுதேன், நான் தாகமாக இருந்தேன் என்பதால் மட்டுமல்ல கொஞ்சம் என்னை வேடிக்கைக்காகவும், கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தவும் கூட அந்த அழுகை வந்திருக்கலாம். பல விதமாக நீங்கள் என்னை மிரட்டிய பிறகு, பயனில்லாமல் போகவே என்னை படுக்கையிலிருந்து தூக்கிச் சென்று பலகணியில் கொண்டு தனியாக நிறுத்தினீர்கள். அது என்று நான் கூறப்போவதில்லை- அன்றைய இரவில் அமைதியைப்பெற இதைத் தவிர வேறு வழியில்லை என்பது என்பதும் உண்மையே. நான் இதனை கூறுகிறேன் என்றால் குழந்தை வளர்ப்பில் உங்களது முறை அதுவாகவே இருந்தது. அதன் பிறகு நான் கீழ் படிந்து நடக்கத் தொடங்கினேன் என்பது உண்மைதான். ஆனால் எனக்கு உள் மனதில் காயம் ஏற்பட்டதும் உண்மை. ஒன்றுமே இல்லாத ஒரு செயலுக்கு வெளியில் கொண்டு தனியாக நிறுத்தி வைக்கும் அசாதாரண பயங்கரம் என்பதே எனக்கு விஷயம்.

இது சிறு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நான் எனது தந்தையின் அடக்கு முறைக்கு முன் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு என்னை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது (இந்த உணர்வு, வேறு ஒரு விதத்தில் புனிதமானதும், பலன் மிக்கதும் கூட). எனக்கு என்ன தேவைப்பட்டிருக்கும் என்றால் சிறு ஊக்குவிப்பு, சிறு நட்புறவு, என்னுடைய பாதையை லேசாக திறந்து விடுதல் அவ்வளவே....

நான் நினைக்கிறேன்... குழந்தை வளர்ப்பு உங்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது. உங்களைப் போன்ற மனிதர்களிடத்தில் உங்களது வளர்ப்பு முறைகள் உதவிகரமாக இருக்கும்

என்று நினைக்கிறேன்... ஆனால் என்னைப்போன்ற சிறுவன் என்ற வகையில், நீங்கள் எனக்கு பிறப்பித்த ஆணைகள் எல்லாம் சொர்கத்திலிருந்து வரும் கட்டளையே. அதை என்னால் மறக்க முடியாது. உலகத்தை பற்றிய முக்கியமான தீர்ப்பை வடிவமைத்துக் கொள்ள ஒரு முக்கியமான வழிமுறையாக அவை அமைந்தது. அனைத்திற்கும் மேலாக உங்களைப் பற்றிய தீர்ப்பையும் நீங்களே அறியச் செய்வது. ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் முழுதும் தோல்வி அடைந்தீர்கள். குழந்தைப் பருவம் முதலே நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும் தருணம் உணவு மேசையில்தான். அப்போதெல்லாம் மேஜை நாகரீகம் பற்றி நீங்கள் அறிவுரை வழங்குவீர்கள். மேஜைக்கு என்ன வருகிறதோ அதைத் தின்ன வேண்டும், உணவின் தரத்தைப் பற்றி மூச்சு விடக்கூடாது. ஆனால் பல முறை உணவின் தரம் பற்றி நீங்கள் குறை கூறியுள்ளீர்கள்.... எப்போதுமே உங்களைப் போல் குழந்தைகளும் வேகமாக சாப்பிடவேண்டும். "முதலில் சாப்பிடு அப்புறம் பேசலாம்" "வேகம், வேகம் வேகம்... இதோ பார் நான் பல யுகங்களுக்கு முன்னரே முடித்து விட்டேன். ரொட்டியை வெட்டும்போது ஒரு துளியும் வேஸ்ட் ஆகக் கூடாது. ஆனால் மேஜையில் உனது இருக்கைக்கு கீழ்தான் அனைத்து வேஸ்ட்களும் இருப்பது வழக்கமாக இருந்தது...

இவ்வாறாக உங்கள் போதனைகளை நீங்களே மீறுவீர்கள்... இதனால் உலகம் எனக்கு 3 பிரிவுகளாக பிரிந்து போனது: ஒன்று, நான் ஒரு அடிமை, எனக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நான் வாழவேண்டும். இரண்டாவதாக, இது என்னிலிருந்து எல்லையற்று விலகிச்சென்ற ஒரு உலகம், இதில் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள், ஆட்சி செய்வதில் மட்டுமே கவலை, உத்தரவுகளை பிறப்பிக்கிறீர்கள், அதற்கு கீழ்படியாமையால் ஏற்படும் ஆத்திரம் என்ற இந்த 2-வது உலகம். பிறகு 3-வது உலகம் இதில் யாரும் யாருக்கும் கீழ்படிவதில்லை, எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

அதிர்ஷ்ட வசமாக இது அனைத்திற்கும் விதிவிலக்குகளும் இருக்கின்றன. குறிப்பாக நீங்கள் அமைதியான முறையில் துன்புறும்போது, அன்பும், பாசமும் அனைத்து தடைகளையும் உடைக்கும்போது அந்தத் தருணங்கள் நெகிழ்வானவை. இது மிகவும் அரிதே என்றாலும், அது அபாரமானது. உதாரணமாக ஆரம்பக் காலங்களில், கடும் கோடைக் காலங்களில், மதிய உணவிற்குப் பிறகு நீங்கள் களைப்பாக இருக்கும்போது, அலுவலகத்தில் மேஜையில் முழங்கையை ஊன்றி சிறு உறக்கம் கொள்ளும்போது அல்லது அம்மா நோய் வாய்ப்பட்டிருந்தபோது... குலுங்கிக் குலுங்கி நீங்கள் அழும்போது அல்லது கோடை விடுமுறையில் எங்களுடன் நீங்கள் கிராமத்திற்கு விடுமுறையை கழிக்க வரும்போது, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்களைப்பிலிருந்து திரும்பும்போது; அனைத்திற்கும் மேலாக, நான் கடைசியாக உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, ஓட்லாவின் அறைக்கு வந்து நீங்கள் என்னைப் பார்த்தீர்கள், வாசற்படியில் நின்று கழுத்தை எக்கி அறைக்குள்ளே என்னைப் பார்த்தீர்கள், ஒரு கரிசனையில் நீங்கள் எனக்கு கையை அசைத்தீர்கள். இது போன்ற தருணங்களில் மகிழ்ச்சியால் ஒருவர் அழவேண்டும். ஒருவர் இப்போதும் அழுகிறார், இதை எழுதும்போது...

உங்களிடம் அரிதான, குறிப்பாக அழகான, சகஜ பாவனையான புன்னகை உண்டு. யாரை நோக்கி இந்த புன்னகை வீசப்படுகிறதோ அந்த நபருக்கு அது முழுதும் மகிழ்ச்சியை மட்டுமே அளிக்க முடியும்... ஆனால் இது போன்ற நட்புணர்வு கூட கால ஓட்டத்தில் அதிகப்படியான குற்ற உணர்வையும், உலகம் மேலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது என்பதையுமே எனக்கு அறிவித்தது....

உங்களுடைய செல்வாக்கினால்தான் நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ அவ்வாறு ஆனேன் என்று நான் கூற மாட்டேன். ஏனெனில் அது மிகையான கூற்று (ஆனால் இந்த மிகையான கூற்றை நான் பற்றுகிறேன்). உங்களுடைய செல்வாக்கின்றியே நான் வளர்ந்து விட்டேன், இன்னமும் உங்கள் இதயத்தை பின் தொடர முடியாத மனிதனாக இருக்கிறேன்... உங்களை என் நண்பனாக ஏற்பதில் மகிழ்கிறேன், ஏன் எனது முதலாளியாக, எனது மாமாவாக, எனது தாத்தாவாகக் கூட ஏற்பதில் மகிழ்வேன். ஆனால் ஒரு தந்தையாக நீங்கள் எனக்கு மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள். அதுவும் எனது சகோதரர்கள் இறந்த பிறகு, சகோதரிகள் மிகவும் சிறியவர்களாக இருந்ததாலும், நான் மட்டுமே உங்களின் உஷ்ணத்தை தாங்க வேண்டியதாயிற்று-- இதற்கு நான் மிகவும் பலவீனமானவன்....

Share this Story:

Follow Webdunia tamil