Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூக்களின் அழகை வண்டுகளே அறியும்!

Advertiesment
பூக்களின் அழகை வண்டுகளே அறியும்!
பூக்களின் மகரந்தத்தை வண்டுகள் சேகரிக்கும் என்பதை நாம் விஞ்ஞானப் பாடத்திலும், பட்டறிவிலும் தெரிந்து வைத்திருக்கிறோம். சங்க இலக்கியத்தில் மலர்களுக்கும் வண்டுகளுக்கும் உள்ள உறவுகளை வைத்து எண்ணற்ற பாடல்களை எழுதித் தள்ளியுள்ளனர் சங்கப் புலவர் பெருமக்கள்.

webdunia photoWD
இதில் புகழ் பெற்றது "கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி..." என்ற குறுந்தொகை பாடல். திருவிளையாடல் தருமி பகுதியின் மூலமாக நவீன தமிழ் நெஞ்சங்களில் ஊடுருவி புகழ் பெற்ற பாடல் இது. தலைவியின்பால் ஊடல் கொண்ட தலைவன் கூந்தலின் மணம் பற்றி பெருமை மிகுதியாக கூறுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

தலைவன் வண்டை நோக்கி கேட்கிறான் எவ்வளவு மலர்களில் நீ அமர்ந்திருப்பாய் இந்த மலர்களில் ஏதாவது ஒன்றிற்கு என் தலைவியின் கூந்தலில் உள்ள மணம் உண்டா என்பதை நீ என் நிலத்தை சேர்ந்த வண்டு என்று நினையாமல், பாரபட்சமில்லாமல் நடு நிலையுடன் கூறுவாய் என்று கேட்பதாக இந்த அற்புதமான சங்கப்பாடல் அமைந்துள்ளது.

அந்த கேள்விக்கு பதில் அளிப்பதுபோல் அமைந்துள்ளது சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்பு ஒன்று. அதாவது பூக்களுக்கு மட்டுமே உள்ள தனித்த அழகு வண்டுகளுக்கு மட்டுமே தெரியுமாம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது பற்றி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். நாம் எந்த கோணத்திலிருந்து பார்க்கிறோமோ அதற்கேற்ப வித்தியாசமான வண்ணங்களை காட்டுவது மலர்கள்.

மலர்களின் இதழ்கள் வானவில்லின் அத்தனை நிறங்களையும் காண்பித்து பூந்தாது (தேன்) சேகரிக்கும் பூச்சியினங்களை கவர்ந்திழுக்கிறது என்று இந்த ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தங்களிலே உள்ளார்ந்து உள்ள இந்த நிறமாலையை பூச்சிகளை கவர்ந்திழுக்கும் வண்ணம் தினுசு தினுசாக பூக்கள் பல வண்ணங்கள் காட்டி கவர்ந்திழுக்குமாம்.

இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி பெவர்லீ க்ளோவர் இது குறித்து கூறுகையில் தங்களது ஆய்வின் முதற்கட்ட முடிவின் படி மலர்களின் இந்த நிறமாலைக் கவர்ச்சி பரந்து விரிந்தது என்கிறார்.

"தோட்டக்கலை முதல் வேளாண்மை வரை மலர்களும் அதன் பூந்தாது உறிஞ்சும் பூச்சியினங்களும் ஒன்றுக்கொன்று பல்வெறு வண்ணங்களை ஒளிர்வித்து அடையாளம் காட்டிக் கொள்கின்றன, இது நமது அன்றாட வாழ்வில் நாம் கவனிக்க முடியாத, நம் பார்வைக்கப்பாற்பட்ட இயற்கை நிகழ்வு" என்கிறார் இந்த விஞ்ஞானி.

இந்த நிறமாலையை செம்பருத்திப் பூவிலும், மணிமலர் வகைகளிலும் இந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இதனை தேனீக்களும் வண்டுகளும் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை.

பெரும்பாலும் எல்லா மலர்களிலும் காணப்படும் இந்த நிறமாலை வண்ண பேதங்களை மனிதர்கள் காண முடியாது என்று கூறும் இந்த விஞ்ஞானிகள் வண்டுகள், தேனீக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களுக்கே இது தெரியும் என்றும் இதனால்தான் வண்டுகளும், தேனீக்களும் கூட தேர்ந்தெடுத்த மலர்களையே விரும்புகின்றன. கொங்கு தேர்... வாழ்க்கையுடைய வண்டு என்பது உண்மைதானே. நல்ல பூந்தாதுகளை தேடி ஆராய்ந்து உண்ணும் வண்டு என்று சங்க காலத்தில் தனது உள்ளுணர்வின் மூலம் புலவர்கள் போகிற போக்கில் கூறிய ஒன்று இப்போது விஞ்ஞான ரீதியாக உண்மையாகியுள்ளது.

எனவே மலர்களை அதன் மென்மைக்காக பெண்களுடன் ஒப்பிடும் மரபுடன் கவர்ந்திழுக்கும் பெண்களுக்கு மலர்களை ஒப்பிடும் மரபையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil