[பழமொழிகள் சமுதாயத்தின் மக்களிடையே ஓழுக்கங்களை போதிக்கவல்லது என்றும் அது மனித மனத்தை பண்படுத்தவல்லது என்றும் நாம் நினைத்திருக்கலாம். ஆனால், கூட்டாக, குழுவாக, சாதியாக வாழும் மனித மனத்தில் ஏற்படும் காழ்ப்புணர்வின் பிரதிபலிப்பாகவும் சில பழமொழிகள் உள்ளதை இந்த ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்... 1979ம் ஆண்டு செப்டம்பர் மாத கணையாழி இதழில் இந்த கட்டுரை வெளியானது.]
-----------------------------
பழமொழிகள் யாவும் மக்களின் அனுபவக் குரலாக ஒலிக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கோலங்கள், சமூக-சாதி உணர்வுகள், தொழில்கள் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன. சமுதாய வாழ்வின் பொதுவான போற்றுதல்களையும் தூற்றுதல்களையும் விளக்கிக் கூறுபவையாகும் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மக்கள் கூறும் பழமொழிகளிலிருந்து அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை ஓரளவிற்கு ஊகித்துணர முடியும். அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நிலைகளையும் ஆய்ந்தறிய பழமொழிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதைத் துணிந்து கூறலாம்.
சாதிக் காழ்ப்புணர்ச்சி:
இந்தியாவில் மொழியினால் மட்டுமின்றி, ஒவ்வொரு மொழியினரும் சாதி எனும் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதியை உயர்த்தியும் பிறர் சாதியினரை தூற்றியும் வந்துள்ளனர். ஒவ்வொரு சாதியினரும் தனி தனிப்பிரிவுகளாக வாழ்ந்து, மற்ற சாதியில் வாழும் மக்களை ஒதுக்கியே வாழ்ந்து வந்திருக்கின்றனர். சாதியினைக் கொண்டே அம்மக்களின் பழக்க வழக்கங்களை அறியும் வண்ணம் பாகுபடுத்திப் பிரிக்கின்றனர். "சாதிக்குத் தக்க புத்தி, குலத்துக்கு தக்க ஆசாரம்" என்னும் பழமொழி மக்களிடையே அறிவு வேறுபாடும் சாதியினால் உண்டாகிறது என்பதை விளக்குகிறது. "ஊணினால் புத்தி, பூணினால் சாதி" என்ற பழமொழியும் இதனையே எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு சாதியை சேர்ந்த மக்களும் மற்ற சாதி மக்களைத் தாக்கும் வழக்கத்தை பழமொழிகள் மூலம் வெளியிடுகின்றனர். அதே சமயத்தில் பிற சாதியினரிடத்தில் காணப்படும் உயர்ந்த பண்புகளைப் புகழாமலும் இருந்து விடவில்லை. அவர்களது அனுபவ மொழிகள் முழுதும் உண்மையெனக் கூறாவிட்டாலும், ஓரளவு உண்மை இருக்கிறதென்பதையும் மறுக்க இயலாது.
சாதி வகைகள்:
தமிழில் காணப்படும் சாதிப் பழமொழிகளைக் காணும்போது உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடின்றி அனைத்துச் சாதியினரைப் பற்றியும் பழமொழிகள் காணப்படுகின்றன. பெரும்பாலான பழமொழிகள் மற்ற சாதியினரிடையே காணப்படும் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. தமிழில் காணப்படும் பழமொழிகள் பிராமணர், செட்டியார், இடையர், வேளாளர், அம்பட்டர், வண்ணார், சக்கிலியர், கம்மாளர், பறையர், தச்சர், தட்டார், குறவர், முதலியார், கிராமணி, கவுண்டர் போன்ற எல்லா சாதியினரைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. அவைகளுக்குள் புகுந்து பார்க்கும்போது, இத்தனை வேறுபாடுகளும் உட்பூசல்களும், நம் மக்களிடையே காணப்படுகின்றனவா என்று தோன்றுகிறது. சாதிச் சண்டைகள் ஆங்காங்கே நடைபெறும்போது ஒரு குற்றவுணர்வுதான் வெளிப்படுகிறது. "ஆயிரம் உண்டிங்கு சாதி" என்று மகாகவி பாரதி கூறிய வாக்கு உண்மையென்று பறைசாற்றிக் கொண்டு இப்பழமொழிகள் திகழ்கின்றன.
பிராமணர்:
"நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் வேண்டுமா?" என்ற பழமொழி அவர்களுக்குறிய சாதி வழக்கமுறையை சுட்டிக்காட்டுகிறது.
"பின் புத்திக்காரன் பிராமணன்" என்ற பழமொழி அவர்களின் அறிவுத் திறனை எடைபோடுகிறது.
"பசுவிலும் ஏழை இல்லை, பார்ப்பாரிலும் ஏழை இல்லை", "பசுவிலே சாதுவையும், பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது" - என்ற பழமொழிகள் அவர்கள் செல்வந்தர்களாகவே உள்ளனர்; ஏழைகள் இல்லை என்பதாக உள்ளது.
கடுமையான பழிப்புரைகளை பழமொழியில் காணும்போது, எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். "அண்டைவீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்", "பார்ப்பான் சேவகமும் வெள்ளைக் குதிரை சேவகமும் ஆகாது" என்ற பழமொழிகள் நேரடியாக பழித்துரைக்கின்றன. மேலும் அவர்களது உணவு முறையைப் பற்றிக் கூறும் இரு பழமொழிகளாக "பானையிலே சோறு இருந்தால் பார்ப்பான் கண்ணடையான்" "ஒரு பிடிச் சோற்றுக்கு பார்ப்பான் ஊர்வழி போவான்" என்பவை உள்ளன.
செட்டியார்:
இச்சாதியைச் சேர்ந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் சிக்கனமான பேர்வழிகள் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. இவர்களது பணம் சம்பாதிக்கும் திறனும் பாராட்டுக்குரிய பண்பாகும். இவர்கள் பண்பைக் குறிக்கும் வகையில் "ஆதாயம் இல்லாமல் ... ஆற்றோடு போவானா" "ஆதாயமில்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பானா" என்ற பழமொழிகள் வழங்குகின்றன. "போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்" என்ற பழமொழிகளும் அவர்களது பொருள் ஈட்டும் திறனைக் காட்டுகின்றன. மறைமுகமாக இவ்வாறு கூறினாலும் இச்சாதியினரைப் பற்றி புகழ்ந்துரைகளையும் காண்கிறோம். "செட்டி பிள்ளையோ கெட்டிப்பிள்ளையோ" ... செட்டி மிடுக்கோ, சரக்கு மிடுக்கோ போன்ற பழமொழிகள் அவர்களது தொழிற் திறமைகளை பாராட்டுகின்றன.
பறையர்:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக கருதக் கூடிய மக்களைப் பற்றிய பழமொழிகளும் தாக்கியே பேசுகின்றன. அவர்களது குல வழக்கமும், பேச்சு முறைகளும் ஏளனம் செய்யப்படுகின்றன. "பறச்சி பிள்ளையைப் பள்ளியிலே வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்", பள்ளி பாக்கு தின்றால் பத்து விரலுக்கும் சுண்ணாம்பு" என்று ஏளனம் செய்கின்றது. முதல் பழமொழி அவர்களது பேச்சு வழக்கு எவ்வளவு மாற்றினாலும் மாறாது என்று கூறுகிறது. வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் அவர்களிடத்தில் இல்லையென்றோ, அல்லது முறையாக போடத்தெரியாது என்றோ இரண்டாவது பழமொழி ஏளனம் செய்கிறது.
"பறைப்புத்தி அரைப்புத்தி" என்று புத்தி கூர்மை பற்றிக் கூறும் பழமொழி மூலம் மற்ற சாதியினைச் சேர்ந்த மக்கள் இவர்களை தாழ்ந்த நிலையில் வைத்தே எண்ணிப்பார்க்கின்றனர் என்று அறியலாம்...
இடையர்:
"என்ன மாயம் இடைச்சி மாயம் மோரோடு தண்ணீர் கலந்த மாயம்" என்ற பழமொழி அவர்கள் நீர் கலந்து செய்யும் வியாபாரத்தை எள்ளி நகையாடுகிறது.
"ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா", “கொடுக்க மாட்டாத இடையன் சினை ஆட்டைக் காட்டியது போல" என்ற பழமொழிகள், அவரகளது தானம் வழங்காத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சில பழமொழிகள் இந்த சாதியினரை வெளிப்படையாகத் தாக்கிப் பேசுகின்றன... பொதுவாகப் பார்க்கும்போது இவர்களது குலத் தொழிலைப் பற்றிய பழமொழிகளே அதிகம் காணப்படுகின்றன.
போற்றுதலும் உண்டு:
தமிழக மக்கள் பழமொழிகள் மூலம் பிற சாதியினர் மீது கண்டனக் கணைகளையே வீசுகின்றனர். பிற வகுப்பாரைப் பற்றிய கிண்டல்களும் கேலிகளுமே அதிகமாக விரவிக் கிடக்கின்றன. எனினும் மற்ற சாதியினரிடையே காணப்படும் நல்ல குணங்களையும் பாராட்டத் தவறவில்லை. "ஓடிப்போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்" என்ற பழமொழியில் இவர்கள் பிறரை ஆதரிக்கும் போக்கு கூறப்படுகிறது. "அந்தணருக்குத் துணை வேதம்" ஆகிய பழமொழிகள் அந்தந்த சாதியனரைப் பராட்டுகின்றன...
சீரழிவின் நிலை:
தனித் தனிப்பிரிவினராக ஒதுங்கியே வாழ்ந்த மக்கள் சாதியின் பெயரால் தங்களுக்கிடையே ஒரு முட்டுக்கட்டையை வளர்த்துக் கொண்டுள்ளனர். இவ்வளவு வேகமாகவும் விறு விறுப்பாகவும் ஒருவரையொருவர் பழித்துக் கொண்டு எவ்வாறு வாழ்ந்தனர் என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும். இவ்வாறு பழிப்புரைகளிடையே உயர்வு, தாழ்வு என்ற எண்ணம் இடையில் புகுந்து நிற்கின்றது. இன்னும் இந்த இழி நிலை நீங்காது தொடர்வதை காணும்போது இன்னும் நாம் வளரவில்லையோ என்று நம்மை நாமே கேட்கத்தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது சாதியினுள் ஐக்கியமாகிவிடுகின்றான். முற்றும் துறந்த சன்யாசிகள் முதற்கொண்டு அனைவருக்கும் இந்த பற்றுதல் விடாது என்பதைப் பழமொழிகள் உணர்த்துகின்றன. "சன்யாசிக்கு சாதி மானம் போகாது", "சாதி மானமும், சமய மானமும் சன்யாசிக்கு உண்டு" என்ற பழமொழிகள் இந்த உண்மையை தெரிவிக்கின்றன.
வேற்றுமையுள் ஒற்றுமை:
...ஒற்றுமையின் தொடர்பை விளக்கும் பழமொழிகளைக் காணும்போது இவர்கள் எவ்வாறு தாக்கிக் கொண்டார்கள் என்று எண்ணுகிறோம். "நாலாந்தலைமுறையைப் பார் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்" என்ற பழமொழி உறவு முறையை கற்பிக்கின்றது.
"பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பாரின்றி கீழ்ச்சாதி ஆனான்", "தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு" போன்ற பழமொழிகள் இவர்களிடையே உறவுப்பாலம் அமைக்கின்றது. தங்களுக்கிடையே உள்ள வேற்றுமை உணர்வால் ஒருவருக்கொருவர் பழிப்புரைகளை வீசிக் கொண்டிருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் அதற்கு எதிர்ப்புக் குரலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அங்கே அது ஒற்றுமையின் வலிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
பாதிப்புகள்:
ஒரு சமுயாதத்தின் படிப்பினைகளாக விளங்கக்கூடிய பழமொழிகள் மக்களின் மனதை படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழில் காணப்படும் பழமொழிகள் தமிழக மக்களின் அனுபவக் குரலாக விளங்குகின்றன. சமுதாயத்தில் காணப்படும் சாதிமுறைகள் மக்களை எவ்வாறு பாதித்தன என்பதை உணர்த்துகின்றன. பலவித வேற்றுமைகளினுள்ளும் ஒருமித்த மனத்துடன் காலங்காலமாக வாழ்ந்து, வளர்ந்து வரும் சமுதாயத்தில் இச்சாதிப் பூசல்கள் மறைமுகமாகவே இவர்கள் வாழ்க்கையை பாதிக்கின்றன. அவை எல்லைமீறும்போது சாதியின் காரணமாக சிற்சில இடங்களில் வெடித்துக் கிளம்புகின்றன.