"நீ என்னவாக௦ வேண்டும்?" கேட்டார், ஆசிரியர்.
"விஞ்ஞானி" என்றான் சுரேஷ்.
"மருத்துவன்" என்றான் மூர்த்தி.
"வழக்கறிஞன்' என்றான் மகாலிங்கம்.
என்னிடம் கேட்டார்...
"ஆசிரியர்" என்றேன் நான். பொய்தான், உண்மையில் 'தந்தை' ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். காரணம்...
என் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் என்னுடனும் எனது சகோதரனுடனும் விளையாடுவதை என் தந்தை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வரும் என் தாய் "செடிகளை அழித்துவிடாதீர்" என்று சத்தமிடுவார். அதற்கு என் தந்தை "நாம் செடிகளை அழிக்கவில்லை, குழந்தைகளை வளர்க்கிறோம்" என்று பதிலளிப்பார்.
ஆம் அப்படித்தான் அவர் எங்களை வளர்த்தார். என் தந்தை எனக்கு எப்போதும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தந்ததில்லை. அவர் வாழ்ந்தார். அதைப் பார்த்து எங்களை வாழச் செய்தார். அது எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும் சரி. துணை புரிந்தாரே தவிர, முழுமையாக ஏற்றுக் கொண்டதில்லை.
ஒரு தந்தை நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களுக்குச் சமமானவர் என்ற அறிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட்டின் வாக்கு எவ்வளவு உண்மையானது என்பதை எனது தந்தையிடம் நான் கண்டேன்.
எதைக் கேட்டாலும், "நீ முடிவு செய்' என்று அவர் சொல்லும் போது எனக்குக் கோபம் வரும். என்னைத் தனிமையில் தவிக்க விட்டு விட்டதாகத் தோன்றும். ஆனால் மிக விரைவில் எனது கோபம் தவறு என்று புரிந்துவிடும்.
அவர் எங்களுக்காக பெரும் பொருட் செல்வங்கள் எதையும் சேர்க்கவில்லை. புத்தகங்களைச் சேகரித்தார். எங்களின் அறிவு முதிர்ச்சிக்கேற்ற புத்தகங்களைத் தேடிப் பிடித்து வழங்கினார். அவற்றைப் படிக்கச் சொல்லித் தூண்டினார். எதுவொன்றையும் தானாகத் தேடிக் கற்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கினார்.
இதனால் அவருக்கு எல்லாம் தெரியும் என்று பொருளல்ல. அவருக்குத் தெரியாத விடயங்களை தெரியவில்லை என்று மனதார ஒப்புக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. முடிந்த வரை அவசியமானவற்றைத் தேடவும் அவர் தவறியதில்லை.
எங்களைத் தாங்கும் வேளையில் அவர் தடுமாறிய தருணங்களும் பல இருக்கின்றன. ஆனால் ஒருபோதும் நிலை குலைந்ததில்லை, அவரது தந்தை இறந்தபோது தவிர...
எந்த ஆணும் அப்பாவாகி விடலாம். ஆனால் தந்தையாக முடியாது. அதற்குச் சில சிறப்பான குணங்கள் தேவை. வாழ்வின் கடுமையான பகுதிகளில் பெற்ற அனுபவங்களை நினைத்தாலன்றி அந்தக் குணங்களைப் பெற இயலாது.
ஒருவேளை எனது தந்தையை, அவரது இளமைக் காலத்தில் தாயின்றி, உறவுகளின்றி, வாழ்வின் வசந்தங்களின்றி வாழ்ந்த அவரது அனுபவமோ, அல்லது அதற்குப் பிறகு கிடைத்த அவரது தோழர்களோ இவவாறு உருவாக்கியிருக்கலாம்.
எனது தந்தையைப் பார்த்து நானும் விரும்புகிறேன். தந்தையாக வேண்டும் என்று...