172 ஆண்டுகள் பழமையான சென்னை மத்திய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முனனர் பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை அதிகாரி டிஜிபி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கும் பழமையான மத்திய சிறைச்சாலை கட்டிடம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. இந்த சிறைச்சாலையை இடிப்பதற்கு முன்பு அதை உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ஏராளமான பொதுமக்கள் சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.
மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறைச்சாலையை பொதுமக்கள் பார்க்க அனுமதிப்பது குறித்து சிறைத்துறை அதிகாரி ஆர்.நடராஜ், உயர் அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார்.
அதன்படி, மத்திய சிறைச்சாலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன்பு மாலை நேரத்தில் 2 மணி நேரம் பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை சிறைத்துறை டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தெரிவித்தார்.
பொதுமக்களை பார்க்க அனுமதிக்கும்போது அதில் பாதுகாப்பு பிரச்சினையும் உள்ளது. எனவேதான் மாலையில் மட்டும் சுமார் 2 மணி நேரம் சிறைச்சாலை கட்டிடத்தை பார்ப்பதற்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.