சென்னையில் நடைபெற்று வரும் பழைய நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ரூ.100, ரூ.50, ரூ.10 நாணயங்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்தோடு பார்த்து செல்கிறார்கள்.
சென்னை நாணயவியல் கழகம் சார்பில் பழைய நாணயங்கள் கண்காட்சி வேப்பேரியில் உள்ள மகாராஷ்டிரா பில்டிங் டிரஸ்ட் கட்டிடத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நாணயவியல் ஆய்வாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில், இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில், ஆதிகாலம் முதல் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விதவிதமான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அரியவகை பொருட்களும் கண்காட்சியில் பார்க்கலாம். இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். கண்காட்சி நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.