சென்னை வர்த்தக மையத்தில் இன்று துவங்கும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) மாநாட்டில், இந்திய பெண்களுக்கான பாதுகாப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, நாராயணசாமி தெரிவித்துள்ளனர்.
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இதுவரை 6 முறை நடைபெற்றது. என்.ஆர்.ஐ.களுக்கான 7-வது மாநாடு முதன் முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை இந்திய வர்த்தக சபை ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டில் முக்கிய அம்சமாக பெரிய அளவில் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அரங்குகளை பார்வையிட்ட பின்னர் மத்திய அமைச்சர்கள் வயலார் ரவியும், நாராயணசாமியும் கூட்டாக அளித்த பேட்டியில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அயல்நாடு வாழ் இந்தியர்கள் வருகின்றனர். முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மூன்று, நான்கு தலைமுறைகளாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நம் நாட்டின் மொழி மற்றும் கலாச்சாரத்தை கடைபிடித்து வருகின்றனர்.
என்றாலும், அவர்கள் தொடர்ந்து மொழி பற்றையும், கலாசாரத்தையும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் வாழ்பவர்களை இந்திய பெண்கள் திருமணம் செய்துகொண்டு அங்கு வசிக்கின்றனர். அப்படிப்பட்ட பெண்கள் பலருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. இதை தடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மாநாட்டில் கருத்துகள் பறிமாறிக்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்காக முதலீடுகள் செய்து வருகின்றனர். அவர்கள் நமக்கு உதவுவது போல, நாம் அவர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்ய முடியும் என்பது பற்றியும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து உறவுகளை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். இந்த முக்கியம் வாய்ந்த மாநாடு சென்னையில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது என்றார்கள்.